

மேற்கு மகாராஷ்ட்ராவின் கோஹ்லாபூரை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் ரூ.300 லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். மாட்டிவிடக்கூடாது என அந்தப் பணத்தை அவர் வாயில் போட்டு விழுங்க முயற்சித்துள்ளார்.
சந்த்காட் என்ற இடத்திலிருக்கும் காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி கூறிய அதிகாரி ஒருவர், "தீபாலி காட்கே, அந்த காவல் நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள். 28 வயது இளைஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ரூ. 300 லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்.
அவர் முன்னமே லஞ்சம் கேட்டிருந்ததால், பாதிக்கப்பட்டவர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். அதன்படி காவல் நிலையத்தில் இருக்கும் ஆவணங்கள் அறையில் தீபாலியைப் பிடிப்பதற்கான வலை விரிக்கப்பட்டது." என்று கூறினார்.
போலீஸில் சேர்ந்து 5 வருடங்கள் கூட ஆகாத தீபாலி, தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்து சட்டென அந்த ரூபாய் நோட்டுகளை தன் வாயில் போட்டு, மென்று முழுங்கப் பார்த்தார். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இதைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர். ஆனால் அங்கிருந்த இன்னொரு பெண் கான்ஸ்டபிள் உடனடியாக செயல்பட்டு, தீபாலி நோட்டுகளை விழுங்கவிடாமல் தடுத்துவிட்டார்.
கிழிந்த பாதி நோட்டு காகிதங்கள் ஆதரமாக சேகரிக்கப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.