விதிமுறைகளை மீறியதால் இரு சக்கர வாகன ஓட்டிக்கு ரூ.3.4 லட்சம் அபராதம் @ பெங்களூரு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் 350 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் போலீஸார் அவருக்கு ரூ.3.4 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

பெங்களூரு மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக அபராதம் செலுத்த வேண்டிய வாகன ஓட்டிகளுக்கு கெடுவிதித்து வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றனர். தொடர்ச்சியாக விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கே சென்று அபராதத்தை வசூலிக்கும் பணியிலும் இறங்கியுள்ளனர். இதுதவிர, வாகன உரிமையாளர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் முறையிட்டு அபராதம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் போலீஸார் சுதாமா நகரைச் சேர்ந்த 33 வயதான இரு சக்கர வாகன ஓட்டி ஒருவரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரிடம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, தவறான வழியில் வாகனம் ஓட்டியது உட்பட 350க்கும் மேற்பட்ட முறை போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறினர். அதற்கு ஆதாரமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வழ‌ங்கினர். இதற்கு ரூ.3.4 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இல்லாவிடில் வாகனத்தை பறிமுதல் செய்வதுடன், சட்ட ரீதியான வழக்கையும் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி, தனது வாகனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 30 ஆயிரம். இத்தனை முறை நான் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடவில்லை. எனவே ரூ.3.4 லட்சம் அபராதம் செலுத்த முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் விரைவில் ரூ.3.4 லட்சம் நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்துமாறு வாகன உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளனர். இல்லாவிடில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in