“மூன்றாவது முறையும் மோடிதான் பிரதமர்” - குமாரசாமி நம்பிக்கை

“மூன்றாவது முறையும் மோடிதான் பிரதமர்” - குமாரசாமி நம்பிக்கை
Updated on
1 min read

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

பாஜக மேலிடத் தலைவர்களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளேன். பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை நாங்கள் பறிக்க மாட்டோம். விரைவில் நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும். இண்டியா கூட்டணி தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை. தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கர்நாடகாவில் எங்களது கூட்டணி 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். எனவே மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நம்புகிறேன்.

அவரது செயல்பாடுகள் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே விரிசல் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. 15-வது நிதிக்குழு கர்நாடகாவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக சித்தராமையா கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in