Published : 13 Feb 2024 06:51 AM
Last Updated : 13 Feb 2024 06:51 AM

15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை பள்ளிக்கு செல்ல மறுத்து குழந்தைகள் போராட்டம்

சாலையை சீரமைக்கக் கோரி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

முசாபர் நகர்: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பில்கோரா கிராமம் உள்ளது. மிகச்சிறிய கிராமமான இங்கு பள்ளி கிடையாது. பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2.5 கிலோ மீட்டர் தூரம்நடந்து அருகிலுள்ள டவுனில் உள்ள பள்ளிக்குச் செல்லவேண்டும்.

ஆனால் கிராமத்தையும் அந்தடவுனையும் இணைக்கும் இரண்டரை கிலோமீட்டர் தூர சாலை படுமோசமாக உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் இன்னும் அதே நிலையில்தான் உள்ளது. இதனால் இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுத்து வருகின்றனர். இந்நிலையில் சாலையை செப்பனிடக் கோரிஅந்த கிராம மக்கள் பள்ளியைப் பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த புனித் சவுத்ரி கூறும்போது, “கிராமத்தையும், பள்ளிஅமைந்துள்ள டவுன் பகுதியையும் இணைக்கும் பிரதான சாலை படுமோசமாக உள்ளது. இப்பகுதியில் ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது. இந்த சாலையை சீரமைக்குமாறு அரசின் அனைத்துத் துறைகளுக்கும் மனு கொடுத்துவிட்டோம். ஆனால் இதுவரை எந்தநடவடிக்கையும் இல்லை. இதனால் நாங்கள் வெறுப்படைந்துவிட்டோம்.

போராட்டம் நடத்துவது என தீர்மானித்து களத்தில் இறங்கிவிட்டோம். இதையடுத்து அங்குள்ள பள்ளியை மூடிவிட்டு தர்ணாவைத் தொடங்கியுள்ளோம்.

கடந்த ஒரு வாரமாக இங்குள்ள 3 பள்ளிகளையும் நாங்கள் மூடிவிட்டு தர்ணாவை தொடங்கிவிட்டோம். இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இருந்தபோதும் எங்களது போராட்டத்தை நாங்கள் கைவிடப் போவதில்லை” என்றார்.

போராட்டத்தில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவர் சாகர் சவுத்ரி கூறும்போது, “சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் எங்களால் பள்ளிக்கு நடந்து செல்ல முடியவில்லை. இதனால் எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது” என்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்போராட்டம் நடத்திய கிராம மக்களிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் இந்த பேச்சுவார்த்தையில் எந்தப் பலனும் எட்டவில்லை. இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளின் உருவ பொம்மைகளையும் பில்கோரா கிராம மக்கள் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உதவி ஆட்சியர் விளக்கம்: மாவட்ட உதவி ஆட்சியர் ரவீந்திர குமார் கூறும்போது, “இந்தப் பணியை செய்ய வேண்டியது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அல்ல. இதுதொடர்பாக மாநிலத் தலைநகர் லக்னோவிலுள்ள அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் இப்பிரச்சினையை சரி செய்வோம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x