Published : 06 Feb 2018 08:31 AM
Last Updated : 06 Feb 2018 08:31 AM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு 2 நாள் சிபிஐ காவல்- சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் இந்திராணி முகர்ஜியை 2 நாள் விசாரிக்க சிபிஐ போலீஸாருக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி யளித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை நிறுவியவர் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி. இந்திராணிக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்த மகள் ஷீனா போரா. 2012 ஏப்ரல் மாதம் ஷீனா போரா கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கிலும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திராணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி சுனில் ராணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 3 நாள் இந்திராணி முகர்ஜியை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ போலீஸார் அனுமதி கேட்டிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, 2 நாள் அனுமதியை வழங்கினார். மேலும் பிப்ரவரி 7-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியாவிடம் இருந்து நிதி பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x