இந்திய பண்பாடு சார்ந்த கல்வி தேவை: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

இந்திய பண்பாடு சார்ந்த கல்வி தேவை: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

Published on

புதுடெல்லி: சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குஜராத்தின் மோர்பி நகரம், தங்காராவில் உள்ள அவரது பிறப்பிடத்தில் நேற்று பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கையை புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர் குஜராத்தில் பிறந்தார். ஹரியாணாவில் களப்பணியாற்றினார். அவரது போதனைகளை நான் மிகுந்த கண்டிப்புடன் பின்பற்றுகிறேன்.

அறியாமை, மூடநம்பிக்கைகளில் இருந்து இந்தியர்கள் விடுபடஅவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆங்கிலேயர் ஆட்சியின்போது நமது பாரம்பரியம் மங்கி வந்த காலங்களில் ‘வேதங்களுக்கு திரும்பு' என்று அவர் அழைப்பு விடுத்தார். நாட்டின் ஒற்றுமையை வளர்ப்பதிலும், பண்டைய பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிலர் அவர்களின் ஆட்சியை ஆதரித்தனர். நமது நாட்டில் நிலவிய சில சமூக தீமைகள் காரணமாக ஆங்கிலேய அரசு நம்மை தாழ்ந்தவர்களாக சித்தரிக்க முயன்றது. சுவாமி தயானந்த சரஸ்வதியின் போதனைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆங்கிலேயரின் சதிகளுக்கு பதிலடி கொடுத்தது.

லாலா லஜபதி ராய், ராம் பிரசாத் பிஸ்மில், சுவாமி சிரத்தானந்த் போன்றோர் ஆரிய சமாஜத்தால் புரட்சியாளர்களாக உருவெடுத்தனர். சுவாமி தயானந்த சரஸ்வதி ஒரு வேத ஞானி மட்டுமல்ல, அவர் ஒரு தேசிய முனிவரும் ஆவார்.

அவர் உருவாக்கிய ஆர்ய சமாஜ் சார்பில் 2,500 க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் 400- க்கும் மேற்பட்ட குருகுலங்கள் மாணவர்களுக்கு தரமான கல்வியை போதித்து வருகின்றன.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்திய கலாச்சாரம், பண்பாடு அடிப்படையிலான கல்வியே நமக்கு தேவை. இது காலத்தின் கட்டாயம்.

உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம், சுயசார்பு இந்தியா,சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை, நீர் பாதுகாப்பு, தூய்மை இந்தியா,விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் ஆரிய சமாஜ் சார்ந்த மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். ஆரிய சமாஜ் கல்வி நிறுவனங்களை சேர்ந்த முதல்முறை வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளைப் புரிந்து செயல்பட வேண்டும்.

பெண்களின் உரிமைகளுக்காக சுவாமி தயானந்த சரஸ்வதி குரல்எழுப்பினார். அவரது வழியைப் பின்பற்றி மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in