

குவஹாத்தி: அமைச்சர்கள், அரசு ஊழியர்களுக்கு இனி மானிய மின்சாரம் கிடையாது என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மின்சார கட்டணமாக மிக குறைந்த அளவிலான தொகை அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இது குறித்து சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடியிருப்புகளில் தனித்தனி ப்ரீ பெய்டு மீட்டரை உடனடியாக பொருத்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டார். அமைச்சர்கள், அரசு ஊழியர்களுக்கு இனி மானிய மின்சாரம் கிடையாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் முதல்வர் சர்மா தெரிவித்துள்ளார்.