

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கேரள மாநிலம் கொச்சி முதல், கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை எரிவாயுக் குழாய் பதிக்கும் பணியை இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) மேற்கொண்டு வருகிறது. இந்த எரிவாயுக் குழாய் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.
இந்தக் குழாய்கள் விவசாய நிலங்களில் பதிக்கப்படுவதை எதிர்த்தும் நெடுஞ்சாலையை ஒட்டி பதிக்க உத்தரவிடக் கோரியும் விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, குழாய் பதிக்கும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் தத்து, எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குழாய் பதிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி கெயில் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
விவசாய நிலங்களில் இத்திட்டத்துக்காக ஏற்கெனவே புதைக்கப்பட்ட குழாய்கள், உபகரணங்கள் வீணாவதால், அவற்றை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்று கெயில் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து தனியாக மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.