Published : 11 Feb 2024 04:49 PM
Last Updated : 11 Feb 2024 04:49 PM

“இண்டியா கூட்டணியின் வலிமை காரணமாக பாஜக அச்சமடைந்துள்ளது” - சச்சின் பைலட்

சச்சின் பைலட் | படம்: ஜி.ராமகிருஷ்ணா

புதுடெல்லி/ ராய்கர்: இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது என்றும், இதன் காரணமாகவே பாஜக தனது அரசியல் பரப்பைத் தீவிரமாக மாற்றியமைக்க முயல்கிறது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "நாங்கள் ஏற்கனவே கூறியதைப் போல் பல்வேறு மாநிலங்களில் எங்களின் கூட்டாளிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடந்தி வருகிறோம். எனவே, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை பாதிக்கிறதா என்ற கேள்விக்கு இடமே இல்லை. யாத்திரை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் மறுபுறம், பிற விஷயங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைமையும், பிறமாநிலத் தலைவர்களும் பார்த்துக்கொள்கின்றனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தக் கூட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடுகிறார்.

நாங்கள் ஒற்றுமையாக போராடுவதை உறுதி செய்வதே எங்களின் முயற்சி. சிலர் எங்களின் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார்கள் என்பது உண்மையே. ஆனால் கூட்டணியில் பெரும்பாலானவர்கள் அப்படியே இருக்கிறார்கள். விரைவில் தொகுதி பங்கீடு, எதிர்கால திட்டங்கள் கூறித்த அறிவிப்புடன் நாங்கள் திரும்பி வருவோம். என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களையும் பாருங்கள். அகாலி தளம், சிவசேனா, பிடிபி, அதிமுக போன்றவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். என்டிஏவில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை, இன்று எங்களிடமிருந்து வெளியேறியிருப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணியில் தான் உள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் என்டிஏ கூட்டணிக்கு மாறியிருப்பது அவர் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தேர்தலின் போது பிஹார் மக்கள் அவருக்கு தகுந்த பதிலளிப்பார்கள். ஆட்கள் வருவார்கள் போவார்கள் ஒருவர் இருவர் அணி மாறுவது இண்டியா கூட்டணியின் முயற்சியை பாதிக்காது. இண்டியா கூட்டணி மற்றும் என்டிஏவுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் நேரடிப் போட்டி எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறியுள்ளது. இண்டியா கூட்டணியைப் பொறுத்த வரை இறுதி முடிவு நேர்மறையானதாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். பிராந்திய கட்சிகள் அதிக இடங்களை விட்டுக்கொடுக்க விரும்பாது. தேசிய கட்சியான நாங்கள், எங்களின் மாநில பிரிவுகளுக்கு கடமைப்பட்டுள்ளோம். எனவே ஒரு கொடுக்கல் வாங்கல் எப்போதும் இருக்கும். நாங்கள் எங்கள் கூட்டாளிகளின் உணர்வுகளையும் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இறுதி இலக்கு நாட்டுக்கு ஒரு மாற்றை முன்வைப்பதே. நாங்கள் அதை அடைவோம்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இண்டியா கூட்டணி பெரும் சவலாக இருக்கும். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் வாக்கு சதவீதம் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு 60 சதவீதமாகவும், என்டிஏ கூட்டணிக்கு 35 சதவீதமாகவும் இருந்தது என்று ஒரு கணக்கீடு சொல்கிறது. அதனால் தான் அவர்கள் மத்திய அமைப்புகள், தவறான தகவல், கொள்கைகள் அல்லது அழுத்தம் மூலமாக இண்டியா கூட்டணி ஒன்றுபட விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இது எல்லாம் வீண் முயற்சி. ஏனென்றால் இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். பாஜகவை தோற்கடிப்பதே அவரின் நோக்கம். அதனால் நாங்கள் ஒன்றாக இணைந்து முன்னேறி செல்ல ஒரு வழியை கண்டடைவோம்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசியுள்ளார். நாடாளுமன்றம் என்பது கொள்கைகள் மற்றும் சட்டங்களை விவாதிப்பதற்கான இடம். ஆனால் பொதுத்தேர்தலுக்காக அது அரசியல் பேச்சுக்கான மேடையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருவகையான அசட்டுத் துணிச்சல் மற்றும் நெஞ்சழுத்தம். கடைசி வாக்கு எண்ணப்படும் வரை யாருக்கு வெற்றி தோல்வி என்பதை இந்திய மக்களே தீர்மானிப்பார்கள். நமது வாக்காளர்களின் நோக்கம் மற்றும் அறிவு குறித்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மைக்கும் வெற்றுக்கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் மக்களுக்குத் தெரியும். இந்தியா கூட்டணியின் ஒற்றுமை பாஜகவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. பிரதமரின் 300 இடங்கள் 400 இடங்கள் பேச்சு, யதார்த்தத்தை மீறிய ஒரு அலங்காரப்பேச்சே." இவ்வாறு சச்சின் பைலட் பேசினார். மேலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, வேலைவாய்ப்புகளை வழங்குவது, எம்எஸ்பிக்கான சட்ட கட்டமைப்பு, கருப்பு பணத்தை ஒழித்தல் என்ற பாஜகவின் வாக்குறுதிகள் எதையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை என்றும் பைலட் குற்றம்சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x