Published : 11 Feb 2024 01:33 PM
Last Updated : 11 Feb 2024 01:33 PM

நாளை மறுநாள் டெல்லியை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு - பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார் தீவிரம்

டெல்லி எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள், பாதுகாப்பு பணியில் போலீஸார்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் இருந்து 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து நாளை மறுநாள் டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக சம்யுக்தா கிஸான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிஸான் மஸ்தூர் மோர்ச்சா அமைப்பினர் அறிவித்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள டெல்லி, ஹரியாணா போலீஸார் தயாராகி வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜன.26ம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது டெல்லி தெருக்களில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதல் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பேரணியை எதிர்கொள்ள டெல்லி போலீஸார் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "விவசாய அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் டெல்லி போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறைந்தபட்ச ஆதார விலை, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் அதிகமான விவசாய அமைப்புகள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன. விவசாயிகளை ஹரியாணா எல்லையிலேயே தடுப்புகளைக் கொண்டு தடுத்து நிறுத்த டெல்லி போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றால் இந்தத் தடுப்புகளை நகர்த்த கிரேன்களும் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டெல்லிக்குள் விவசாயிகளை நுழைய விடாமல் தடுக்கும் வகையில் ஹரியாணாவும் சிமெண்ட் தடுப்புகளை எல்லையில் வைத்துள்ளது. இதனிடையே பஞ்சாப் மற்றும் ஹரியாணா போலீஸார் விவசாயிகளின் போராட்டங்களை எதிர்கொள்ளும் வகையில் போலி டிராக்டர் பேரணி ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரியாணாவில் 10, பஞ்சாபில் 30 என மொத்தம் 40 டிராக்டர்கள் பேரணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் தடுப்புகளை மீறிச்செல்ல முயன்றால் கண்ணீர் புகை வீசுவதற்காக அதற்கான பயிற்சியில் டெல்லி போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோவில், வடக்கு டெல்லியின் திறந்த வெளி ஒன்றில் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டனர். போலீஸாரின் இந்தப் பயிற்சி உள்ளூர்வாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் பலர் பயிற்சிக்கு பின்னர் தங்களின் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தில் சுமார் 2,000 டிராக்டர்கள், 20,000 விவசாயிகளுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் வரலாம். அவர்கள் டெல்லிக்குள் நுழைவதற்கு கார், இரண்டு சக்கர வாகனங்கள், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளை பயன்படுத்தலாம் என்றும், அவர்களில் பலர் பிரதமர், அமைச்சர்கள், பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு முன் கூடி போராட்டம் நடத்தலாம் என்றும், போராட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் ஈடுபடுத்தப்படாலாம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தை முன்னிட்டு டெல்லி போலீஸார் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீஸார் அஞ்சுகின்றனர். கடந்த ஜன.26ம் தேதி டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போராட்டக்கார்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் செங்கோட்டையை அடைந்து அங்கு விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 30 போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் எல்லையிலேயே தடுத்து நிறுத்த ஹரியாணா அரசும் தீவிரமாகி வருகிறது. பஞ்ச்குலாவில் 144 தடையுத்தரவு அமல்படுத்துவது, இணைய சேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப தடைவிதிப்பது, எல்லைப்பகுதிகளில் சிமெண்ட் தடுப்புகள், தண்ணீர் பீச்சும் இயந்திரம், மணல்முட்டைகள் அடுக்குவது என தயாராகி வருகிறது. விவசாயிகளை தடுத்து நிறுத்த 50 துணைராணுவ படைப் பிரிவுகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x