

போர்ட் பிளேர்: போர்ட் பிளேரில் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு 2,700-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன கடிதங்களை வழங்க உள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள், ஆயுதப் படைகள் மற்றும் பொதுத் துறை நிறுவ னங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாபெரும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து நாட்டின்பல்வேறு பகுதிகளில் ரோஜ்கார்மேளா எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நடத்திஅரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமனகடிதங்களை பிரதமரும் மத்திய அமைச்சர்களும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேரில் வேலைவாய்ப்பு திருவிழா நாளை (பிப்.12) நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு 2,721 பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்க உள்ளார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “போர்ட் பிளேர் நேதாஜி விளையாட்டு அரங்கில் விழா நடைபெற உள்ளது. உள்ளூர் நிர்வாகத்தில் ‘குரூப் சி’ பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இந்த விழாவில் நியமன கடிதங்கள் வழங்கப்படும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் 3 நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வந்துள்ளார். அவரும் துணை நிலை ஆளுர் டி.கே.ஜோஷியும் போர்ட் பிளேர் வேலைவாய்ப்பு திருவிழாவில் பங்கேற்பார்கள்” என்றார்.