Published : 11 Feb 2024 07:20 AM
Last Updated : 11 Feb 2024 07:20 AM

தேர்தலுக்கு முன்பு குடியுரிமைத் திருத்த சட்டம் அமல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா கூறினார்.

டெல்லியில் பிரபல ஆங்கில ஊடகம் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாகலந்துகொண்டார். அப்போதுஅவர் பேசியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 400 இடங்களிலும் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பார்.

மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து எங்களுக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் மீண்டும் வெற்றிபெறும் என்பதை தெரிந்துகொண் டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியஅரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்தோம். வரும் மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்கள் பாஜகவுக்கு தேவையான ஆசிகளை வழங்குவார்கள். பாஜகவுக்கு 370 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கும் மேல் வழங்கி அவர்கள் ஆசி கொடுப்பார்கள் என நம்புகிறோம்.

2024 மக்களவைத் தேர்தல் என்பது பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு இடையேயான மோதல் இல்லை. இது வளர்ச்சி மற்றும் வெற்று கோஷங்களைக் கொடுப்பவர்களுக்கு இடையிலான தேர்தலாக இருக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாட்டின் பொருளாதாரத்தில் எப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது. இதன் காரணமாகவே வெள்ளை அறிக்கையை வெளி யிட்டோம்.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைமையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து, அந்நிய முதலீட்டை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இப்போது ஊழல் எதுவும் இல்லை. எனவே வெள்ளைஅறிக்கை வெளியிட இதுவே சரியான நேரம் என முடிவு செய்து வெளியிட்டோம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட விவகாரத்தில் அரசியல்எதுவும் இல்லை. ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதே 500 ஆண்டுகளாக நாட்டு மக்களின் விருப்பமாக இருந்தது. அவர்களின் கோரிக்கையைத்தான் நாங்கள் நிறைவேற்றினோம்.

கடந்த 2019-ல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) இயற்றினோம். இதற்கான விதிகளை வெளியிட்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பே அதை அமல்படுத்துவோம். இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க மட்டுமே சிஏஏ சட்டம் உள்ளது. இதனால் யாருடைய இந்தியக் குடியுரிமையையும் மத்திய அரசு பறிக்காது.

பொது சிவில் சட்டம் (யுசிசி) என்பது நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு உள்ளிட்டோர் செய்யநினைத்த விஷயமாகும். ஆனால்,சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாகக் காங்கிரஸ் கட்சியால் அதைச் செய்யமுடியவில்லை. இது தொடர்பாக அனைவரிடமும் விவாதம் நடத்தப்படும். மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான சிவில் சட்டங்கள் இருக்க முடியாது.

இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.

அயோத்தி ராமர் கோயில்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று விவாதம் நடைபெற்றது. மக்களவையில் பாஜக எம்.பி. சத்யபால் சிங் இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். பல கட்சி எம்.பி.க்கள் இந்த விவாதம் மீது பேசினர். பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, “அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கான மக்கள் போராட்டம் 1528-ல் தொடங்கியது, அதற்கான சட்டப் போராட்டம் 1858-ல் தொடங்கியது, இது அனைத்தும் ஜனவரி 22 அன்று முடிவுக்கு வந்தது. இந்த நாள் மாபெரும் இந்தியாவுக்கான பயணத்தின் தொடக்கத்தை குறிக்கிறது.

அயோத்தியில் இணக்கமான சூழலில் ராமர் கோயில் கட்டப்பட்டது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x