Last Updated : 16 Feb, 2018 04:51 PM

 

Published : 16 Feb 2018 04:51 PM
Last Updated : 16 Feb 2018 04:51 PM

அம்பலமான வங்கி மோசடிகள்: 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் வழக்குகள், ரூ.60 ஆயிரம் கோடி மோசடி- பிஎன்பி வங்கி முதலிடம்

 

கடந்த 5 ஆண்டுகளில் 8,670 மோசடி வழக்குகளும், ரூ.61 ஆயிரத்து 270 கோடி மோசடியும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

வங்கிகளின் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருப்பது வாராக்கடனும், வங்கிக்கடன் மோசடியுமாகும். ஒவ்வொரு நிதி ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளை வாராக்கடனில் சேர்ப்பதால், இழப்பீடு என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அரசியல் கட்சிகளோடு தொடர்புடைய பெருநிறுவனங்கள், செல்வாக்கு மிக்க தனிமனிதர்கள் வாங்கும் கடனை வசூலிக்க முடியாமல் லட்சக்கணக்கான கோடிகள் வாராக்கடனில் நிலுவையாக இருக்கின்றன. இதுவரை வங்கிகளின் வாராக்கடன் ரூ.9.5லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், வங்கிகளின் செயல்பாடு என்பது பெரும் சிக்கலையும், அதை நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு போதுமான அளவில் கடன் கொடுக்க முடியாத சூழலும் இருந்து வருகிறது. இதையடுத்து, வங்கிகளுக்கு முதலீட்டு நிதியாக ரூ.2 லட்சம் கோடியை அடுத்த 2 ஆண்டுகளுக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய ரூ.9,500 கோடி கடனை இன்னும் திரும்ப மீட்க முடியாமல் வங்கிகள் திணறுகின்றன. இந்நிலையில், அடுத்த பெரும் அடியாக, நிரவ் மோடி ரூ.11 ஆயிரத்து 400 கோடி மோசடி என்ற பெரிய மோடி உருவாகியுள்ளது.

இப்போதுள்ள சூழலில், தொழிலதிபர் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரத்து 400 கோடி மோசடி செய்ததுதான் நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடியாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் ரிசர்வ் வங்கியில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுச் செய்து இருந்தார்.

அதில் கடந்த 5 நிதி ஆண்டுகளாக வங்கி மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், மோசடி செய்த பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கேட்டு இருந்தார். அது குறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

அதில் கடந்த 5 நிதி ஆண்டுகளாக அதாவது 2017ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதது, உள்ளிட்ட பல்வேறு விதமான மோசடிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 670 ஆகும். இதில் ஒட்டுமொத்த ரூ. 61 ஆயிரத்து 270 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே வாராக்கடனில் சிக்கி திணறும் வங்கிகளுக்கு இந்த வங்iகி மோசடி வழக்குகளும், அதனால் வராமல் கிடக்கும் பணமும் மேலும் தலைவலியை உண்டாக்குகிறது. கடந்த ஆண்டு இறுதிவரை வங்கிகளின் வாராக்கடன் ரூ.9.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது கவலைதரும் விஷயமாகும்.

கடந்த 2012-13ம்ஆண்டு ரூ. 6 ஆயிரத்து 357 கோடியாக இருந்த வங்கி மோசடியின் அளவு படிப்படியாக அதிகரித்து, கடந்த நிதி ஆண்டு ரூ. 17 ஆயிரத்து 634 ஆக அதிகரித்துவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகள் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்துள்ளன. இந்த வங்கியில் 389 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ரூ.6 ஆயிரத்து 562 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த இடத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 389 மோசடி வழக்குகளும், ரூ. 4 ஆயிரத்து 473 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது. பேங்க் ஆப் இந்தியாவில் 231 மோசடி வழக்குகளும், ரூ.4 ஆயிரத்து 50 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 1,069 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மோசடி பணத்தின் மதிப்பு கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x