

பிரதமர் நரேந்திர மோடியை, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு ஆந்திர அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதில், ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் குறிப்பிட்டுள்ள நிதி, சிறப்பு அந்தஸ்து, தெலங்கானா மாநிலத்தில் இருந்து வரவேண்டிய நிதி நிலுவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
மேலும், தற்போதைய ஆந்திர அரசியல் நிலைமை, தேர்தல் நிலவரம், காங்கிரஸில் அவரது தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா இணைந்தது, தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி போன்ற விஷயங்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதன் பின்னர், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த சந்திப்பால் ஆந்திர அரசியல் கூட்டணியில் சில மாற்றங்கள் நிகழலாமென கூறப்படுகிறது. எனவே, ஆந்திர முதல்வரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.