மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு - டெல்லியில் திமுக எம்.பி.க்கள் கருப்பு சட்டை போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என கண்டனம் தெரிவித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக கூட்டணி எம்.பி.க்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.படம்: பிடிஐ
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என கண்டனம் தெரிவித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக கூட்டணி எம்.பி.க்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்து, டெல்லியில் திமுக எம்.பி.க்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 1-ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கடந்த 6-ம் தேதி குற்றம்சாட்டி பேசினர். இதன் தொடர்ச்சியாக, திமுக மற்றும்கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் நேற்றுகருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்புபோராட்டம் நடத்தினர்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, துணை தலைவர் கனிமொழி,திமுக உறுப்பினர் ஆ.ராசா, காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர்மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். ‘அடக்குமுறையை வீழ்த்துவோம், தமிழக அரசை வஞ்சிக்காதே’ என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறியபோது, “மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினோம். அதை மக்களவை தலைவர் நிராகரித்துவிட்டார். இதை கண்டித்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தோம். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும்’’ என்றார்.

‘நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை. எங்கள் உரிமையை தாருங்கள்’ என்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in