

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல் பட வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக டெல்லி வந்துள்ளனர். முதல் கட்டமாக அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் வெள்ளிக் கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:
அமைச்சர் சுஷ்மாவுடனான சந்திப்பு முழு திருப்தி அளிக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் பங்கு மிகவும் முக்கியமானது.
எங்களது பூர்வீகம் இந்தியா. எங்களது கலாச்சாரமும் முழுக்க முழுக்க இந்திய கலாச்சாரம்தான். எனவே இலங்கைத் தமிழர் பிரச்சி னையில் இந்திய அரசு ஆக்கப்பூர் வமாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல் கள், இலங்கை அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் ஆகி யவை குறித்து அமைச்சர் சுஷ்மா விடம் எடுத்துரைத்துள் ளோம்.
13-வது அரசியல் சட்டத் திருத் தத்தை அமல்படுத்தவும் தமிழர் பகுதிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கவும் இலங்கை அரசிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.
தமிழர் பகுதிகளில் சிங்கள குடி யேற்றங்கள் அதிகரித்து வருகின் றன. அதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றார்.
வெளியுறவுத் துறை விளக்கம்
இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் நிருபர்களிடம் கூறியதாவது:
அமைச்சர் சுஷ்மாவிடம் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் விரிவான விளக்கம் அளித் துள்ளனர். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக அந்த நாட்டு அரசிடமும் பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மோடியுடன் இன்று சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது தங்கள் பிரச்சினைகளை மோடியிடம் அவர்கள் விரிவாக எடுத்துரைப் பார்கள் என்று தெரிகிறது.