மக்களவையில் வெள்ளை அறிக்கை முதல் வேகமெடுக்கும் அமைச்சர்கள் வழக்கு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.8, 2024

மக்களவையில் வெள்ளை அறிக்கை முதல் வேகமெடுக்கும் அமைச்சர்கள் வழக்கு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.8, 2024
Updated on
3 min read

மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய 10 ஆண்டு கால ஆட்சி மற்றும் தற்போதை 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை குறித்து
நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

47 பக்கங்கள் கொண்ட அந்த வெள்ளை அறிக்கையில், "காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2004-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது, நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்தது. அதோடு, சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஏற்றதாகவும் இருந்தது. 1991-ல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கான பெருமைக்கு உரிமை கோர ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமை தவறிவிட்டது. அதோடு, 2004-ல் ஆட்சிக்கு வந்த அவர்கள் அந்த சீர்திருத்தங்களை கைவிட்டார்கள்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது நாட்டின் பொருளாதார கொள்கைகள் பல தவறான திசைகளில் சென்று முன்னேறுவதற்கு வழி இல்லாத நிலையில் சிக்கி இருந்தது. நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால நீடித்த முயற்சிகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் உறுதிப்டுத்தப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விட்டுச் சென்ற சவால்களை நாங்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கைக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட்ட காங்.: பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை வெளியிட்டார். இது குறித்து கார்கே கூறுகையில், “நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம்" என்றார்.

காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை குறித்து பிரதமர் மோடி கூறும்போது, எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை தனது அரசாங்கத்துக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக உள்ளது என தெரிவித்தார்.

“கூட்டாட்சிக் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும்” - பினராயி விஜயன்: மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய பாஜக அரசு தலையிடுவதை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள அமைச்சரவை சார்பில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "மாநிலங்களின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்வதால் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது. இதற்கு எதிராக எங்களின் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யவும், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்கவும் இன்று டெல்லியில் நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம்" என்று பேசினார்.

“மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார் மோடி”: "மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதல்வர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு மாபெரும் நிதி நெருக்கடிப் பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம் மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார் பிரதமர் மோடி" என்று மத்திய அரசைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள அரசு நடத்தும் போராட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார் .

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சொ.கு. வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க அனுமதி: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கும்படி தலைமை நீதிபதி தனக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான இந்த 4 வழக்குகள் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்ரவரி 12, 13ம் தேதியும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் முதலீடுகள் - அரசு விளக்கம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய 33 மாத ஆட்சிக் காலத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூபாய் 8.65 லட்சம் கோடி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அதன் மூலம் ஏறத்தாழ 30 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட திரண்டவிவசாயிகள் தடுப்பு: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிட திரண்ட நிலையில், அவர்கள் நொய்டாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகள் மீது ஏறி கீழே குதித்து பேரணியைத் தொடர விவசாயிகள் முயன்றனர். எனினும், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தானில் மொபைல் சேவை துண்டிப்பு: வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்புகள் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் முழுவதும் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் உள்ள ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். . செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இந்தச் சோதனை குறித்து தகவலறிந்த உள்ளூரைச் சேர்ந்த திமுகவினர் வீட்டு முன் கூடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in