“சிறப்பாக வேலை செய்பவர்கள் எப்போதும் மதிக்கப்படுவதில்லை” - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
புதுடெல்லி: “எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுபவர்கள் அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவது இல்லை. தடுமாறியவர்கள் தண்டிக்கப்படுவதில்லை” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனது பேச்சில் யாரையும் அவர் குறிப்பிடவில்லை.
மராத்திய செய்தி நிறுவனம் ஒன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறந்த செயல்பாடுகளுக்காக விருது வழங்கும் விழாவை டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம். சிறப்பாக செயல்படுபவர்கள் எப்போதும் மரியாதை பெறுவதில்லை. தவறாக வேலை செய்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. இதை நான் எப்போதும் வேடிக்கையாக செல்வது உண்டு.
தங்களுடைய சித்தாந்தத்தில் உறுதியாக இருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவ்வாறு இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சித்தாந்தத்தில் நடக்கும் இந்த சீரழிவு ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை. நாங்கள் வலதுசாரிகளோ இடதுசாரிகளோ இல்லை சந்தர்ப்பவாதிகளாக அறியப்படுபவர்கள் என்று சிலர் எழுதுகின்றனர். அவர்கள் அனைவரும் ஆளும் வர்க்கத்துடன் இணைந்து இருக்க விரும்புகின்றனர்.
இந்தியா ஜனநாயகத்தின் தாயாக விளங்குவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த சிறப்பு காரணமாக நமது ஜனநாயக ஆட்சி முறை உலகின் சிறப்பானதாக இருக்கிறது. பிரபல்யமும், விளம்பரமும் முக்கியம் தான். ஆனாலும் தங்களின் தொகுதி மக்களுக்காக என்ன வேலை செய்துள்ளார்கள் என்பது நாடாளுமன்றத்தில் அவர்கள் என்ன பேசியுள்ளார்கள் என்பதைவிட மிகவும் முக்கியமானது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பிறகு ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் என்னை மிகவும் கவர்ந்த தலைவர், அவரிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அதேபோல, சமீபத்தில் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட முன்னாள் பிஹார் முதல்வர் கப்பூரி தாகூர் குறிப்பிடத்தகுந்தவர். முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்தார். அவரிடமிருந்து மக்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவரைப் போன்றவர்கள் நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருப்பதை உறுதி செய்கிறார்கள்”. இவ்வாறு மத்திய அமைச்சர் பேசினார்.
