Last Updated : 15 Feb, 2018 07:33 PM

 

Published : 15 Feb 2018 07:33 PM
Last Updated : 15 Feb 2018 07:33 PM

பேட் மேன் போன்ற ஒரு படத்தைப் தடை செய்ய முடியாது: பாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி

பேட்மேன் திரைப்படம் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டது குறித்து பாலிவுட் இயக்குநர் பால்கி, இப்படி செய்வது, பெண்களுக்கும் மனிதாம்சங்களுக்கும் நியாயம் செய்வதாகாது என்று கூறியுள்ளார். பேட்மேன் திரைப்படம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய பிரச்சனைகளை முன்வைக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘பேட்மேன்’ பாலிவுட் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கு யூனிசெஃப் மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.பால்கி மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் ட்விங்கிள் கன்னா இருவரும் இதில் பங்கேற்றனர்.

அப்போது இயக்குநர் பால்கி பேசியதாவது:

''பேட்மேன் திரைப்படம் பாகிஸ்தானில் மட்டுமே தடை செய்யப்பட்டது. ஆனால் இதற்கு அவர்கள் சொல்வது தவறான காரணங்கள் என்று நினைக்கிறேன்.

இது போன்ற ஒரு படத்தை நீங்கள் தடை செய்ய முடியாது. இந்தத் திரைப்படத்தை நீங்கள் தடைசெய்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையில் பெண்களுக்கும் மனிதர்களுக்கும் அநீதி இழைக்கிறீர்கள் என்றுதான் கருதவேண்டியுள்ளது.

இது வழக்கமான பொழுதுபோக்கு படம் இல்லை, இப்படத்தின் கதை ஒரு முக்கியமான மனிதனைப் பற்றியது. அவன் தன் வாழ்க்கையின் அர்த்தம் எவ்வகையானது என்பதைச் சொல்லும் படம் இது.

இப்படங்களை மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. பாகிஸ்தான் தவிர. வித்தியாசமாக, இத்திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றி மத்திய கிழக்கு நாடுகளில் கிடைத்துள்ளது. ஈராக் நாட்டில் திரையிடப்படும் முதல் இந்தித் திரைப்படம் இது. பழமை வாய்ந்த நாட்டில் அவர்களின் கண்ணோட்டத்தின்படி இதுவரை அங்கு இந்தித் திரைப்படங்கள் திரையிட்டது இல்லை.

நான் உறுதியாக நம்புகிறேன் இந்தவகையான படத்தைக் காண பாகிஸ்தான் மக்கள் நிச்சயம்அழுத்தம் கொடுப்பார்கள். ஏனெனில் இப்படம் பெரிய அரசியல் பிரச்சனைப் பேசவில்லை. மனிதநேயத்தை மட்டுமே பேசுகிறது.

மத்திய அரசின் அமைச்சகத்திலிருந்து ஒரு முக்கிய நபர் என்னைக் காணவந்தார், இப்படம் இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய மாதவிடாய் குறித்து பேசுகிறதாமே என்று கேட்டார். அவரிடம் நான் சொன்னேன். ''ஒரு திரைப்படமாக இப்படத்தில் அத்தகைய சர்ச்சைக்குரிய ஒரு விஷயமும் இல்லை. ஆனால் ஒரு அவசியமான பிரச்சனையைப் பேசுகிறது'' என்று அவரிடம் கூறினேன்.

உண்மையில், இந்த படம் ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்றும் பல மத மற்றும் அரசியல் அமைப்புகள் இப்படத்தைப் பற்றி பல முரண்பட்ட தகவல்களைக் கூறிவந்தன, ஆனால் கடைசியில் இப்படத்தை பார்த்து அப்படி யாரும் எதுவும் செய்யவில்லை. மாறாக இப்படத்தை பல அமைப்புகளும் ஆதரிக்கவே செய்கின்றன''

என்று இயக்குநர் பால்கி சுட்டிக்காட்டினார்.

"பேட் மேன்" தமிழ்நாட்டைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தா என்பவரின் உண்மை வாழ்க்கை கதை இது. பெண்களுக்கு குறைந்த செலவிலான சுகாதார துணியை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதை திரைப்படம் பேசியுள்ளது. இது பிப்ரவரி 9 அன்று வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x