

புதுடெல்லி: சிறையில் உள்ள டெல்லி முன்னாள்துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, வாரம் ஒருமுறை மனைவியை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அப்போது 849 மதுக்கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த சூழலில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திக்க பரோல் வழங்கும்படி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிசோடியா முன்வைத்த வாதத்தில், “எனது மனைவியின் உடல்நிலை, மனநிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அவர் படுக்கையில் உள்ளார். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள அவரை சந்திக்க பரோல் வழங்க வேண்டும்’’ என்று கோரினார்.
இதற்கு சிபிஐ, அமலாக்கத் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாரம் ஒருமுறை மனைவியை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்ற வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிசோடியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரணைக்கு பட்டியலிடுமாறு சிசோடியா தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நேற்று முறையிட்டார். இதை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டார். சிசோடியாவின் மனு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று அவர் உறுதியளித்தார்.