Last Updated : 06 Feb, 2024 07:24 AM

 

Published : 06 Feb 2024 07:24 AM
Last Updated : 06 Feb 2024 07:24 AM

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இஸ்லாமிய பிரச்சாரகர் கைது: மும்பையில் குஜராத் ஏடிஎஸ் படை நடவடிக்கை

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல இஸ்லாமியப் பிரச்சாரகரை குஜராத் ஏடிஎஸ் போலீஸார் மும்பையில் கைது செய்தனர்.

குஜராத்தை சேர்ந்த பிரபல இஸ்லாமியப் பேச்சாளர் மவுலானா முப்தி சல்மான் அன்சாரி. இவர் கடந்த ஜனவரி 31-ல் குஜராத்தின் ஜுனாகர் பகுதியில் இஸ்லாமிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவிய இந்த உரையால் கலவரச் சூழல் உருவானதாக கருதப்படுகிறது.

இது தொடர்பான புகாரை விசாரிக்க முப்தி சல்மானை கைது செய்ய குஜராத் ஏடிஎஸ் படையினர் முடிவு செய்தனர். இதையடுத்து மும்பையில் இருந்த அவரை நேற்று முன்தினம் காலையில் திடீரென கைது செய்து காட்கோபர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அப்போது மவுலானாவுக்கு ஆதரவாக காவல் நிலையம் முன்பு முஸ்லிம்கள் ஏராளமானோர் திரண்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவர்களை கலைக்க மகராஷ்டிர போலீஸார் தடியடி நடத்த வேண்டியிருந்தது. இறுதியில் முப்தி சல்மான் கேட்டுக்கொண்ட பிறகு அனைவரும் கலைந்தனர்.

சிறையில் இருக்க தயார்: காட்கோபர் காவல் நிலையத்தில் தனது ஆதரவாளர்கள் முன், முப்தி சல்மான் பேசும்போது, “நான் ஒரு கிரிமினல் அல்ல. என்னை விசாரிக்கவே கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். நானும் இதற்கு ஒத்துழைப்பு அளித்து வருவதால் அனைவரும் கலைந்து செல்லுங்கள். எனக்கு சிறை என்பது உறுதியானால் அதை ஏற்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

இந்திய தண்டனைச் சட்டம் 153 பி, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் முப்தி சல்மான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவுகளானது இரு பிரிவினர் இடையே வெறுப்புணர்வை தூண்டுவது தொடர்பானது ஆகும். முப்தி சல்மான் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த ஜுனாகரை சேர்ந்த முகம்மது யூசூப் மல்லீக், அஜீம் ஹபீப் ஆகிய இருவரை குஜராத் ஏடிஎஸ் படையினர் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

யார் இந்த முப்தி சல்மான்? எகிப்தியப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மவுலானா முப்தி சல்மான் அன்சாரி, முஸ்லிம்கள் இடையே ஒரு இஸ்லாமிய ஆய்வாளராக கருதப்படுகிறார். அல் அமீன் கல்வி மற்றும் இஸ்லாமி நலன் அறக்கட்டளை அமைத்து அதன் சார்பில் பல கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பல்வேறு இஸ்லாமிய மேடைகளில் உணர்ச்சிப்பூர்வமாக உரை நிகழ்த்தும் முப்தி சல்மானுக்கு கல்வி பயிலும் முஸ்லிம் இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர்.

இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் முப்தி சல்மான் மிகவும் பிரபலம். அவரை முகநூலில் 3.7 லட்சம் பேரும், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் பின் தொடர்கின்றனர். கடந்த 2018-ல் இதேபோல் மதவெறுப்பு பேச்சு வழக்கில் முப்தி சல்மான் கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x