Published : 03 Aug 2014 10:15 AM
Last Updated : 03 Aug 2014 10:15 AM

ஆப்பிரிக்க சிங்கங்களும் யானைகளும் இந்தியாவில் வசித்தன: இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் பிரம்மாண்டமான உருவத்துடன் (Siwalik species) வசித்த யானைகள், மான்கள், மாடுகள், குதிரைகள், முள்ளம் பன்றிகள் போன்றவற்றின் தொன்மை எச்சங்களை மேற்கு வங்க மாநிலத்தில் கண்டுபிடித்துள்ளனர் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் (Zoological Survey of India) மூத்த விஞ்ஞானிகள்.

இவை தவிர, ஆப்பிரிக்காவில் மட்டுமே வசிக்கும் விலங்குகளான ஆப்பிரிக்க சிங்கம், யானை, ஒட்டகச் சிவிங்கி, புள்ளி கழுதைப்புலி போன்றவற்றின் படிமங்களும் அங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் ஆப்பிரிக்க விலங்குகள் இந்தியா விலும் வசித்துள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 40,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வசித்த யானைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மிக பிரம்மாண்டமான உருவத்தைக் கொண்டிருந்தன.

உதாரணத்துக்கு அப்போதைய காலகட்டத்தின் யானைகள் இப்போதைய யானைகளைவிட இருமடங்கு பெரியதாக இருந்தன. அவற்றின் தந்தங்களும் மிக நீளமானதாக இருந்தன. இவ்வாறான பிரம்மாண்ட உருவம் கொண்ட விலங்கினங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன.

இந்த நிலையில்தான் இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் மூத்த தொல்லுயிரியியல் விஞ்ஞானி யான டி.கே.பால் மற்றும் அவரது குழுவினர் மேற்கு வங்கத்தின் ஜங்கல் மஹால் மற்றும் சூசூனியா பகுதிகளின் சுற்றுவட்டார குகைகளிலும் பூமிக்கு அடியிலும் மேற்கண்ட விலங்குகளின் தொன்மைப் படிமங்கள் மற்றும் எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி டி.கே.பால் கூறும்போது, “1980-களின் தொடக்கத்திலேயே இதுகுறித்த ஆரம்பக் கட்டத் தடயங்களாக சில உயிரினங்களின் எச்சங்கள் எங்களுக்கு கிடைத்தன. ஆனால் அவற்றைக் கொண்டு மேற்கண்ட விலங்குகள்தான் என்று எங்களால் உறுதியாக நிருபிக்க முடியாது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நூல் பிடித்தாற்போல் விலங்கியல் சார்ந்த தொல்பொருள் ஆய்வுகளை நடத்தினோம்.

ஆய்வக முடிவுகள் மேற்கண்ட உயிரினங்களின் எச்சங்கள், படிமங்கள் ஆகியவை 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை நிருபிக்கின்றன.

தவிர, ஆப்பிரிக்க சிங்கம், யானை, ஒட்டகச் சிவிங்கி ஆகிய விலங்குகளும் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் வசித்திருக்கின்றன என்பதும் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 25 - 26 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா முதல் இன்றைய இமயமலை வரை ஒரே நிலப்பரப்பாக இருந்தன. அந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்க விலங்கினங்கள் இமய மலைப் பகுதி வரை வலசை வந்திருக்கக் கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியா தொடங்கி வடக்கு காஷ்மீர் வரையிலான பகுதிகளில் பனிக்கு அடியில் உறைந்த நிலையில் இருந்த சில உயிரினங்களின் தொன்மைப் படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவையும் இன்றைய ஆப்பிரிக்க விலங்கினங்கள் என்று அறியப்பட்டது.

எனவே, மேற்கண்ட ஆப்பிரிக்க விலங்கினங்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக கூட்டமாக வலசை சென்றபோது ஏற்பட்ட பனி பிரளயத்தில் சிக்கி அழிந்திருக்கலாம்” என்கிறார். மேற்கண்ட ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது இந்திய விலங்கியல் ஆய்வகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x