Last Updated : 19 Feb, 2018 07:03 PM

 

Published : 19 Feb 2018 07:03 PM
Last Updated : 19 Feb 2018 07:03 PM

மகாத்மா காந்தியின் கொலையில் மிகப் பெரிய சதி இருப்பதற்கான ஆவணங்கள்: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

 

மகாத்மா காந்தி கொலையில் மிகப் பெரிய சதி நடந்துள்ளது என்பது ஆவணங்கள் வாயிலாக தெரிய வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி கொலையில் சதி நடந்து இருக்கிறது. அவர் உடலில் 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், 3 துப்பாக்கி குண்டுகள் மட்டுமே சுடப்பட்டதாக போலீஸ் அறிக்கை கூறுகிறது. ஆதலால், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பங்கஜ் பட்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வரலாற்று ஆய்வாளரான பங்கஜ் பட்னிஸ், அபிநவ் பாரத் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். மேலும் இந்து வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்.

இந்த வழக்கின் நீதிமன்றத்துக்கு உதவியாளராக மூத்த வழக்கறிஞர் அமரேந்திர ஷரன், நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கை ஆய்வு செய்து, இதை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிக்கை அளித்து இருந்தார்.

இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.போப்டே, எல் நாகேஸ்வரராவ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பங்கஜ் பட்னிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கூறியதாவது:

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் மிகப் பெரிய சதி நடந்திருப்பது ஆவணங்கள் வாயிலாகத் தெரிகிறது. ஆனால், இந்த ஆவணங்கள் எதையும் யாரிடமும் கிடைக்கவிடாமல், இந்திய அரசு தடை செய்துவிட்டது. ஆனால்,நான் இந்த ஆவணங்களை நியூயார்க்கில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸில் இருந்து பெற்றேன்.

மேலும், நியூயார்க்கில் உள்ள மூத்த அரசு வழக்கறிஞரிடம் இதுகுறித்து ஆலோசனை பெற்றேன். அவர் 40 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். அவர் கடந்த 1948-ம் ஆண்டு, ஜனவரி 31-ம் தேதி காந்தி சுடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நாளேடுகளில் வந்த புகைப்படங்கள் செய்திகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் காந்தி கொல்லப்பட்ட பின் அவரின் உடலில் 4 காயங்கள் இருப்பது தெரிய வருகிறது.

இந்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய மும்பை உயர் நீதிமன்றம்தடை விதித்துள்ளது. அந்தத் தடையை நீக்க வேண்டும். இந்த ஆவணங்கள் எல்லாம் சீல் வைக்கப்பட்ட கவரில் உள்ளன.

இவ்வாறு பங்கஜ் பட்னிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் என்ன ஆவணங்களை தாக்கல் செய்ய விரும்புகிறாரோ அதை மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x