Published : 05 Feb 2024 07:36 PM
Last Updated : 05 Feb 2024 07:36 PM

சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகக் கேலிக்கூத்து: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகப் பார்ப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், அதில் சில குளறுபடிகள் நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதில், “சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான் இதனைப் பார்க்கிறோம். தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை எங்களால் அனுமதிக்க முடியாது.

உச்ச நீதிமன்றம் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தேர்தல் நடத்திய அதிகாரியிடம் சொல்லுங்கள். சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான அனைத்து வாக்குச்சீட்டுகள் மற்றும் வீடியோக்களை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்குச் சீட்டுகளைச் சிதைத்த அதிகாரியை விசாரிக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை சண்டிகர் மேயர் மாநகராட்சி கூட்டத்தை கூட்டக் கூடாது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, சண்டிகர் மாநகராட்சி மன்றத்தில் மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன. என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணி இடையிலான முதல் தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.

மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. இதில் இண்டியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனால் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 12 வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்தனர்.

மேயர் தேர்தலில் பாஜக மோசடி செய்து, வெற்றி பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தார். அதோடு, வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியிட்டன.

அதாவது, தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x