Published : 05 Feb 2024 06:27 AM
Last Updated : 05 Feb 2024 06:27 AM
புதுடெல்லி: பாஜகவில் இணைய தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் ஆனால், ஒரு போதும் செல்ல மாட்டேன்’’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க தனது எம்எல்ஏக்கள் 7 பேருக்கு தலா ரூ.25 கோடி கொடுக்க பாஜக முன்வந்தது என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த பாஜக,டெல்லி போலீஸில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் கல்வி அமைச்சர் ஆதிஷி ஆகியோர்மீது புகார் அளித்தது.
மேலும், மதுபான கொள்கைஊழல் வழக்கில், 5 முறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை என டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் கிராரிஎன்ற இடத்தில் அரசு பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டும் விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாஜக எங்களுக்கு எதிராக சதி செய்கிறது. இந்த முயற்சியில் அவர்கள் தோல்வியடைவர். நான்அவர்களுக்கு எதிராக செயல்படுகிறேன். இந்த நிலைப்பாட்டை கைவிட மாட்டேன். நான் பாஜகவில் இணைய வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், நான் ஒரு போதும் சேரமாட்டேன் என கூறிவிட்டேன்.
நான் எதற்கு பாஜகவில் இணைய வேண்டும்? நீங்கள் பாஜகவுக்கு சென்றால், நீங்கள் செய்தகுற்றங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். நாங்கள் என்ன தவறு செய்தோம்? நாங்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுகிறோம். சாலைகள் போடுகிறோம். கழிவுநீர்கால்வாய்களை சரி செய்கிறோம். இது குற்றமா? இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.
ஆதாரம் அளிக்க உத்தரவு: இதற்கிடையில், பாஜக தரப்பில், ‘‘பொய் குற்றச்சாட்டுகளை கேஜ்ரிவால் கூறி வருகிறார். அவருடைய ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ.க்களிடம் பாஜக.வில் இருந்து யார் பேரம் பேசியது. எந்தெந்த எம்எல்ஏ.க்களிடம் பேசினார்கள் போன்ற விவரங்களை கேஜ்ரிவால் வெளியிட வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களிடம் பேரம் பேசியதாக சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி போலீஸ் குற்றப் பிரிவு அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர் ஆதிஷி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT