Published : 05 Feb 2024 06:56 AM
Last Updated : 05 Feb 2024 06:56 AM
புதுடெல்லி: நொய்டாவில் உயரமான கட்டிடத்திலிருந்து நாய் குட்டியை தூக்கிப்போட்டு சாகடித்த சிறுவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியை அடுத்த நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து, 10 வயதுள்ள ஒரு சிறுவன் நாய் குட்டியை தூக்கிப் போட்டுள்ளான். இதில் அந்த குட்டி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாக பரவியது.
இதுகுறித்து பீப்புள் பார் அனிமல்ஸ் (பிஎப்ஏ) என்ற தொண்டு நிறுவனம் சார்பில் நொய்டா போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதில், அந்த சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவனுடைய மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிறுவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிஎப்ஏ அமைப்பைச் சேர்ந்த சுரபி ராவத் கூறும்போது, “இந்த சம்பவம் நடந்த இதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சில தினங்களுக்கு முன்பு, ஒரு நாய் குட்டியை வேண்டுமென்றே தனது வாகனத்தில் ஏற்றி கொன்றார். மேலும் ஒரு நாய் குட்டி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளின் வாட்ஸ் அப் குழுவில் நாய் குட்டிகளுக்கு எதிராக வன்மமான தகவலை பரப்புகின்றனர். இதுதான் இதுபோன்ற சம்பவத்துக்குக் காரணம்” என்றார்.
தனிநபர் மசோதா: மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே சமீபத்தில் மாநிலங்களவையில் ஒரு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். அதில், “விலங்குகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இப்போதைய சட்டப்படி விலங்குகளை கொடுமைப்படுத்துவோருக்கு ரூ.500 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை ரூ.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT