Published : 05 Feb 2024 06:11 AM
Last Updated : 05 Feb 2024 06:11 AM

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி: பணிகள் வேகமெடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் நடந்து வரும் புதியபாதை, இரட்டைப்பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதிஒதுக்கப்பட்டு உள்ளதால், இனி பணிகள் வேகமாக நடைபெறும் என்றுரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.12,173 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், புதிய பாதைகளுக்கு ரூ.976 கோடியும், அகலப்பாதை திட்டங்களுக்கு ரூ.413 கோடியும், இரட்டைப்பாதை திட்டங்களுக்குரூ.2,214 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் - திருவண்ணாமலை (வழி: செஞ்சி) 70 கி.மீ. தொலைவிலான புதியபாதை திட்டத்துக்கு ரூ.100கோடியும், 179 கி.மீ. தொலைவிலான திண்டிவனம்- நகரி திட்டத்துக்கு ரூ.350கோடியும், 88 கி.மீ. தொலைவிலான அத்திப்பட்டு – புத்தூர் திட்டத்துக்கு ரூ.50 கோடியும், 91 கி.மீ. தொலைவிலான ஈரோடு- பழநி திட்டத்துக்கு ரூ.100 கோடியும், 179 கி.மீ. தொலைவிலான சென்னை –கடலூர் திட்டத்துக்கு(வழி: மகாபலிபுரம், புதுச்சேரி) ரூ.25 கோடியும், 143 கி.மீ. தொலைவிலான மதுரை - தூத்துக்குடி திட்டத்துக்கு (வழி: அருப்புக்கோட்டை) ரூ.100 கோடியும், 60 கி.மீ. தொலைவிலான பெரும்புத்தூர் – கூடுவாஞ்சேரி (இருங்காட்டுக்கோட்டை) திட்டத்துக்கு ரூ.25 கோடியும், 36 கி.மீ தொலைவிலான மொரப்பூர் – தருமபுரி திட்டத்துக்கு ரூ.115 கோடியும், 17 கி.மீ. தொலைவிலான ராமேசுவரம்- தனுஷ்கோடி திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, திருச்சிராப்பள்ளி - காரைக்கால் அகலப்பாதை திட்டத்தின் விரிவாக்கமாக நடந்துவரும் நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி (வழி:திருக்குவளை) புதிய பாதை திட்டத்துக்கு ரூ.150 கோடியும், மயிலாடுதுறை - காரைக்குடி அகலப்பாதை திட்ட விரிவாக்கமான பட்டுக்கோட்டை - மன்னார்குடி, பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் புதிய பாதை திட்டங்களுக்கு சேர்த்து ரூ.161 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் பட்டுக்கோட்டை –தஞ்சாவூர் திட்டம் தொடங்கப்படாத திட்டமாகும்.

இரட்டைப் பாதை திட்டம்: மேலும் 160 கி.மீ. தொலைவிலான காட்பாடி- விழுப்புரம் இரட்டைப் பாதை திட்டம், 160 கி.மீ தொலைவிலான சேலம்- கரூர்- திண்டுக்கல் இரட்டைப் பாதை திட்டம், 65 கி.மீ கரூர்- ஈரோடு இரட்டைப் பாதை ஆகிய திட்டங்களுக்கு தலா ரூ 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 160 கி.மீ.தொலைவிலான மதுரை - மணியாச்சி- தூத்துக்குடி இரட்டைப்பாதை திட்டத்துக்கு ரூ.150 கோடியும், 102 கி.மீ. தொலைவிலான மணியாச்சி - நாகர்கோவில் திட்டத்துக்கு ரூ.116 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மட்டும் ரூ.2,214 கோடி ஆகும். இதன்மூலமாக, முடங்கி கிடந்த தமிழக ரயில்வே திட்டங்கள் இனி வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறும்போது, "மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.12,173 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக நடந்து வரும் புதிய, இரட்டைப் பாதை திட்டப்பணிகள் வேகமாக நடைபெறும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x