Published : 05 Feb 2024 08:18 AM
Last Updated : 05 Feb 2024 08:18 AM

வாட்டர் ஹீட்டரில் நச்சுவாயு கசிவால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.37.5 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கார்நாடாவுக்கு சுற்றுலா சென்றபோது தங்கும் விடுதி குளியலறையில் இருந்த கீசரில் (வாட்டர் ஹீட்டர்) கார்பன் மோனாக்சைடு வெளியானதில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.37.5 லட்சம் இழப்பீடு வழங்க ஹோம்ஸ்டே உரிமையாளருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் மடிகெரி கூர்க் வேலியில் உள்ள ஹோம்ஸ்டே உரிமையாளர் ஷேக் முகமது இப்ராஹிம், நிர்வாக இயக்குநர்கள் முக்தார் அகமது மற்றும் பாண்டியன் ஆகியோருக்கு எதிராக நுகர்வோர் தகராறு தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அதில், எனது மகள் விக்னேஷ்வரி ஈஸ்வரன் எம்பிஏ பட்டதாரி. மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விக்னேஷ்வரி தனது நண்பர்கள் மதுஸ்ரீ, அக்ஷதா, சுரபி மற்றும் கசிஷ் ஆகியோருடன் சேர்ந்து தசராவுக்கு மடிகெரி செல்ல திட்டமிட்டு கூர்க் வேலியில் உள்ள ஹோம்ஸ்டேவில் 2021 அக்டோபர் 23 முதல் 25 வரை தங்குவதற்கு அறை முன்பதிவு செய்து ரூ.1,000 முன்பணம் செலுத்தியுள்ளார். அக்டோபர் 24 அன்று வெளியில் சென்றுவிட்டு இரவு 8.15 மணிக்கு குளியலறைக்கு சென்ற விக்னேஷ்வரி மீண்டும் திரும்பி வரவில்லை.

இதையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விக்னேஷ்வரி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்பன் மோனாக்சைடு வாயு: இதையடுத்து, நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் குளியலறையில் உள்ள கீசரில் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சுவாயு வெளியானதே விக்னேஷ்வரியின் மரணத்துக்கு காரணம் என்பது உறுதியானது. தங்கும் விடுதி உரிமையாளர்களின் பொறுப்பற்ற செயலே எனது மகளின் மரணத்துக்கு காரணம். எனவே உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிடவேண்டும் என்று ஈஸ்வரன் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த குடகு நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: விக்னேஷ்வரி தனியார் நிறுவனத்தில் ரூ.20,833 சம்பளத்தில் வேலை செய்துள்ளார். அதில் பாதி அளவு ரூ.10,417-ஆக வைத்துக்கொண்டால்கூட 30 ஆண்டுகளில் அவர் ஈட்டிய வருமானமான ரூ.37,50,120 இழப்பீட்டை ஹோம்ஸ்டே உரிமையாளர்கள் பெண்ணை இழந்த குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். அலட்சியம் காரணமாக நடைபெற்றஇந்த துயர சம்பவத்தால் விக்னேஷ்வரியின் பெற்றோர் அடைந்த மன வேதனைக்காக கூடுதலாக ரூ.2 லட்சம் அபராதத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x