Published : 05 Feb 2024 09:36 AM
Last Updated : 05 Feb 2024 09:36 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டம் ஷாமொகைதீன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இந்திய வெளியுறவு துறையில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பெண் உளவாளியின் காதல் வலையில் சத்யேந்திர சிவல் சிக்கியுள்ளார். பெண் உளவாளியின் அழகில் மயங்கிய அவர், இந்திய பாதுகாப்பு துறை, ராணுவ கட்டமைப்புகள், இந்திய வெளியுறவு துறை குறித்த ரகசிய தகவல்களை அந்த பெண்ணிடம் பகிர்ந்துள்ளார். இதற்கு பிரதிபலனாக, சத்யேந்திர சிவலுக்கு பணம், பரிசு பொருட்களை பெண் உளவாளி அனுப்பிஉள்ளார்.
இந்த சூழலில், உத்தர பிரதேசகாவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரின் டிஜிட்டல் கண்காணிப்பில், சத்யேந்திர சிவலின் நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்கள் குறித்து சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார், அவரை மிக தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர். இதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐஉளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை சத்யேந்திர சிவல் பகிர்ந்து வருவது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து உத்தர பிரதேசத்தின் மீரட் நகருக்கு அவர் உடனடியாக வரவழைக்கப்பட்டார். விசாரணையில், உண்மையை அவர் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 2-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து உத்தர பிரதேச காவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் மோகித் அகர்வால் கூறியதாவது:
தீவிரவாத தடுப்பு பணிக்காக சமூக வலைதள கண்காணிப்பு உட்பட பல்வேறு வகைகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். அப்போது, இந்திய வெளியுறவு துறையில் பணியாற்றும் சத்யேந்திர சிவல், பாகிஸ்தான் பெண் உளவாளியின் காதல் வலையில் (‘ஹனி டிராப்’) சிக்கியிருப்பது தெரியவந்தது.
உறுதியான ஆதாரங்கள் கிடைத்த பிறகு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். அவரை காவலில் எடுத்துவிசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருக்கிறோம்.
அவரோடு தொடர்பில் இருந்த ஐஎஸ்ஐ பெண் உளவாளி யார், இந்தியாவில் அவருக்கு உதவி செய்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகிறோம். சத்யேந்திர சிவலுக்கு 2 சகோதர்கள், ஒரு சகோதரி உள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு மோகித் அகர்வால் தெரிவித்தார்.
இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புசார்பில் கல்லூரிகளில் படிக்கும்அழகான பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு இந்தி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் சரளமாக பேசவும் இந்திய பெண்களை போன்று உடையணியவும் இந்து மத சம்பிரதாயங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நன்கு பயிற்சி பெற்ற பெண்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்திய பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை, அறிவியல் துறைகளை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வலை விரிக்கின்றனர்.
தற்போது கைதாகி உள்ள சத்யேந்திர சிவலை பேஸ்புக் வாயிலாக பூஜா என்ற பெயரில் ஐஎஸ்ஐ பெண் உளவாளி தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஆராய்ச்சியாளர் என்றுஅறிமுகம் செய்துள்ளார். பின்னர்வாட்ஸ் அப் வாயிலாக சத்யேந்திர சிவலிடம் தொடர்பில் இருந்துள்ளார். மாஸ்கோவில் சத்யேந்திர சிவலை பெண் உளவாளி நேரில் சந்தித்தாகவும் தெரிகிறது.இவ்வாறு உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT