Published : 04 Feb 2024 06:33 AM
Last Updated : 04 Feb 2024 06:33 AM
புதுடெல்லி: போலி வசிப்பிட சான்றிதழ்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மத்திய ஆயுதப் படைகளில் சேர்ந்தது தொடர்பான வழக்கில் மேற்கு வங்கத்தில் 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மத்திய ஆயுதக் காவல் படை ஆட்சேர்ப்பில் எல்லைப் பகுதி இளைஞர்களுக்கு குறைந்தகட்-ஆஃப் மதிப்பெண் அனுமதிக்கப்படுகிறது. எல்லைப்புற மாநிலமாக இருக்கும் மேற்கு வங்கத்திலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெறுவதற்காக பிற மாநிலத்தவர் குறிப்பாக வடமாநில இளைஞர்கள் மேற்கு வங்கத்தில் போலி வசிப்பிட சான்றிதழ்களை பெற்று மத்திய ஆயதப் படைகளில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் பாகிஸ்தானியர் சிலரும் இதில் பலன் அடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இது தொடர்பான வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்றுக்கொண்டது. சிபிஐநடத்திய முதற்கட்ட விசாரணையில் துணை ராணுவப் படையில் 4 பேர் இவ்வாறு சேர்ந்திருப்பதை கண்டறிந்தது.
இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக மேற்கு வங்கத்தில் தலைநகர் கொல்கத்தா மற்றும் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
போலி வசிப்பிட சான்றிதழ் தயாரிப்பில் ஈடுபட்டதாக கருதப்படுவோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT