Published : 30 Jan 2018 12:50 PM
Last Updated : 30 Jan 2018 12:50 PM

17 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த மகன்; தன்னுடைய பெயரில் மற்றொருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி: சினிமாவை மிஞ்சும் ருசிகரம்

17 ஆண்டுக்கு முன் குடும்பத்தைவிட்டு பிரிந்த மகன் மீண்டும் தனது பெற்றோருடன் இணைந்த போது, அங்கு தன் பெயரில் மற்றொருவர் மகனாக வாழ்ந்து வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தெலுங்கு திரைப்படங்களில் வருவதைப் போல் சிறுவயதில் தொலைந்துபோய், இளம் வயதில் பெற்றோருடன் சேருவதைப் போல் இருந்தாலும், சில திருப்பங்களுடன், மிகவும் ருசிகரமாக உண்மையில் நடந்த சம்பவமாகும்.

இந்த சம்பவத்தை இந்த கதையில் வரும் குடும்பத்தாரின் உறவினர் ராம்பிரசாத் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்காவின் சிக்காகோ நகரில்வசித்து வருகிறார்.

 

 

 

அவர் கூறியதாவது:

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளி அருகே இருக்கும் கிராமம் மந்தளவரிப்பள்ளி. இந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் ரகுநாத ரெட்டி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டில் ரகுநாத ரெட்டியின் 11-வயது மகன் திடீரென வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.

தனது மகனை ரகுநாத ரெட்டி பல இடங்களில் தேடியும், பல ஆண்டுகளாக முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு ரகுநாதரெட்டியும், அவரின் மனைவியும் திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்புகையில், தனது தொலைந்து போன மகனின் சாயலில், ஹோட்டலில் பதின் பருவ வயது சிறுவன் ஒருவரைப் பார்க்கிறார்கள்.

அவரின் அங்க அடையாளங்கள், தழும்புகள் என அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது தனது தொலைந்து போன மகன் போல இருந்துள்ளது. இதனால், இவர்தான் தனது மகன் என ரகுநாதரெட்டியும் மனைவியும் நம்புகிறார்கள். அவரிடம் தனது தொலைந்து போன மகன் என சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.

ஆனால், அந்த இளைஞர், நான் உங்கள் மகன் இல்லை எனக் கூறியும், நீ தான் தொலைந்துபோன மகன் என வீட்டில் தங்க வைக்கிறார்கள். பதின் பருவத்தில் இருக்கும் அந்த சிறுவனுக்கோ தனது சகோதரி குறித்தும், உறவினர்கள் குறித்தும் எந்த நினைவும் இல்லை. அவர்களுடன் நெருங்கி பழகாமல் ஒதுங்கியே வாழ்ந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில், வெறுப்படைந்த அந்த சிறுவன் வீட்டில் தங்க முடியாது எனக் கூறி வீட்டில் இருந்து வெளியே செல்ல முயற்சிக்கிறார். அப்போது அவரை ஓர் அறையில் அடைத்து வைத்து ஓடவிடாமல் குடும்பத்தார் தடுக்கின்றனர்.

இப்படி நாட்கள் நகரும்போது, ரகுநாத ரெட்டி புற்றுநோய் காரணமாக திடீரென மரணமடைகிறார். ரெங்காரெட்டியின் மரணம் அந்த சிறுவனின் மனதை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுகிறது.

தந்தை இல்லாத குடும்பத்தையும், அனாதையாக நிற்கும் தாய், தங்கையையும் விட்டு செல்ல அவனுக்கு மனமில்லை. அதனால் அவர்களையே தாயாகவும், சகோதரியாகவும் மனதில் நினைத்து அவர்களுடனே வீட்டில் தங்குகிறார்.

வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் சுமந்து குடும்பத்தை வழி நடத்திச் செல்கிறார். ஆனால், அந்த சிறுவன் தான் உண்மையான மகன் இல்லை என்பதை மட்டும் மறக்கவில்லை. தனது சகோதரிக்கும் நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைக்கிறார்.

இந்நிலையில், உண்மையிலேயே வீட்டைவிட்டு ஓடிப் போன மகன் 17 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த கிராமத்துக்கு கடந்த 27ம் தேதி திரும்புகிறார். அங்கு தனது வீட்டில் தன்னுடைய பெயரில் மற்றொருவர் மகனாக வாழ்ந்து வருவது கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

அதன்பின், தான் வீட்டைவிட்டு ஓடிப்போன கதையையும், அதன்பின் தான் எங்கு வளர்ந்தேன், சிறுவயது சம்பவங்கள் அனைத்தையும் உண்மையான மகன், நினைவு கூர்ந்தபோது, அவரின் தாயும், சகோதரியும் நம்பினர்.

இதையடுத்து, , உண்மையான மகன் வந்துவிட்ட நிலையில், நான் இனி வீட்டில் தங்கவிருப்பமில்லை. அனைத்து பொறுப்புகளையும் அவரே எடுத்துக்கொள்ளட்டும் நான் வீட்டைவிட்டு செல்கிறேன் என்று வளர்ப்பு மகன் உருக்கமாகத் தெரிவிக்கிறார்.

ஆனால், அந்த உண்மையான மகனோ மறுக்கிறார். தான் திரும்பி குடும்பத்தை பார்க்க வந்தது சொத்துக்காக அல்ல, எந்தவிதமான பொறுப்புகளையும் ஏற்கும் நோக்கிலும் வரவில்லை. குடும்பத்தாரை பார்க்க வேண்டும் என்ற நோக்கிலும், திருமணம் செய்ய வேண்டுமென்றால் தாய்,தந்தை விவரம் தேவை என்பதாலுமே பார்க்க வந்தேன் என்று தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி அடையவைக்கிறார்.

தான் பெற்ற மகனும் உடன் இருக்க வேண்டும், வளர்ப்பு மகனும் இருக்க வேண்டும் என தாய் விருப்பம் தெரிவிக்கிறார்.

ஆனால், சகோதரியோ, தன்னை பொறுப்பாக பார்த்துக்கொண்டு திருமணம் செய்து வைத்த வளர்ப்பு அண்ணன் வீட்டில் இருக்க வேண்டும் என கூறுகிறார். இதையே அந்த கிராம மக்களும் வளர்ப்பு மகன்தான் வீட்டில் இருக்க வேண்டும், வசிக்க வேண்டும் என கேட்கிறார்கள்.

இந்நிலையில் அந்த குடும்பத்தில் என்ன நடந்தது, என்ன முடிவு எடுத்தார்கள், எந்த மகன் வீட்டில் தங்கப்போகிறார், என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. சினிமாவைப் போல் அடுத்து ந்ன நடக்குமோ என்ற கேள்வி மட்டும் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x