தலித்துக்கு எதிரான வன்கொடுமை: 23 ஆண்டு நடந்த வழக்கில் 15 பேருக்கு ஆயுள் தண்டனை

தலித்துக்கு எதிரான வன்கொடுமை: 23 ஆண்டு நடந்த வழக்கில் 15 பேருக்கு ஆயுள் தண்டனை
Updated on
1 min read

மதுரா: உ.பி.யில் 23 ஆண்டுகளுக்கு முன்பு 6 மாத குழந்தை எரித்துக் கொல்லப்பட்டது உட்பட தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.73,000 அபராதம் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி (எஸ்சி/எஸ்டி சட்டம்) மனோஜ் குமார் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். இதுகுறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் சுரேஷ் பிரசாத் சர்மா கூறியதாவது: கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி தாதியா கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து நிலத்தில் உயர் சாதியினர் கட்டுமானப் பணிகளை தொடங்கினர். இதற்கு, அங்குள்ள தலித் சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. உயர் சாதியினர் தலித்துகளை கடுமையாக தாக்கியதுடன் துப்பாக்கியாலும் அவர்களை சுட்டுள்ளனர். குடிசைகளுக்கும் தீவைத்தனர். இந்தசம்பவத்தில் ஆறுமாத குழந்தையும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது.

இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 16 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணையின்போது கூடுதலாக 8 குற்றவாளிகளின் பெயர்களும் முதல் தகவலறிக்கையில் சேர்க்கப்பட்டன. கடந்த 23 ஆண்டுகால விசாரணையின்போது 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மீதமுள்ள 15 பேரும் நீதிமன்றத்தால் தற்போது தண்டிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சர்மா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in