

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய இருவேறு வெடிகுண்டு தாக்குதல்களில் 7 தேர்தல் பணியாளர்கள், 5 சிஆர்பிஎப் வீரர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். பிஜப்பூர், பஸ்தர் மாவட்டங்களில் சனிக்கிழமை சுமார் 1 மணி நேரத்துக்குள் இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
தேர்தலை சீர்குலைக்கும் வகையில் நக்சல்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9-ம் தேதி மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
பஸ்தர் மாவட்டத்தில் ஏப்ரல் 10-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேர்தல் பணியாளர்கள் சனிக் கிழமை பஸ் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். கிதுல்னர் கிராமம் அருகே பஸ் வந்தபோது, மறைத்துவைத்திருந்த கண்ணி வெடியை மாவோயிஸ்ட்கள் வெடிக்கச் செய்தனர். இதில் பஸ் கவிழ்ந்து விழுந்தது.
இதையடுத்து அங்கு மறைந்திருந்த சுமார் 75 முதல் 100 பேர் அடங்கிய மாவோயிஸ்ட் குழுவினர் பஸ்ஸை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். ஏற்கெனவே பஸ் கவிழ்ந்ததால் காயமடைந்திருந்த தேர்தல் பணியாளர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
இதில் 6 தேர்தல் பணி யாளர்கள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட பின் உயிரிழந்தார். படுகாய மடைந்த மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே பிஜப்பூர் மாவட்டம் கமானார் கிராமம் அருகே மற்றொரு கண்ணி வெடி தாக்குதலை மாவோயிஸ்ட்கள் நடத்தினர். இங்கு சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. 9 சிஆர்பிஎப் வீரர்கள் அந்த ஆம்புலன்ஸில் இருந்தனர். கண்ணி வெடியில் சிக்கி ஆம்புலன்ஸ் வெடித்துச் சிதறியதில் 5 வீரர்கள், டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகிய 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவு மக்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி வரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கோபத்தை இது மேலும் அதிகரித் துள்ளது. எனவேதான் அவர்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.