

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரிசி அரவை ஆலை ஒன்று எம்.ஜி.ஆர். நினைவிடமாக மாற்றப்படுகிறது.
வடவனூர் கிராமத்தில் இருக்கிறது பாமா அரிசி ஆலை. பாலக்காடு மாவட்டத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட அரிசி ஆலைகளில் இதுவும் ஒன்று. இதே கிராமத்தில்தான் எம்.ஜி.ஆர் சிறு வயதில் வசித்த இல்லம் இருக்கிறது.
எனவே, பழமைவாய்ந்த இந்த ஆலை எம்.ஜி.ஆர் நினைவிடமாக மாற்றப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கிராமப்புற பாரம்பரிய மையமாகவும் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய டிரஸ்ட் (INTACH) இதை முன்னெடுத்துச் செயல்படுத்துகிறது.
இது குறித்து அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருண் நாராயணன், "இந்த மையத்துக்கு மகோரா (MAGORA) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்பதன் சுருக்கம் இது. பாலக்காட்டின் பெருமைகளை உணர்த்தும் வகையில் புகைப்படக் காட்சியை வைப்பதுடன் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்., தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களையும் இந்த மையத்தில் வைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மையம் வரும் சனிக்கிழமை கேரள கலாச்சார அமைச்சர் ஏ.கே.பாலனால் திறந்துவைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்து கொள்கிறார்.
பாலக்காட்டில் ஏற்கெனவே எம்.ஜி.ஆரின் சிறு வயது இல்லம், எம்.ஜி.ஆர்., மண்டபம் ஆகியன இருக்கும் சூழலில் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ள மகோரா நினைவு இல்லம் இன்னும் நிறைய சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கும் என நம்பப்படுகிறது.