

சோலன்: இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரப்படி இதில் சுமார் 19 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்.
சோலன் மாவட்டத்தின் கீழ் உள்ள ஜார்மஜ்ரி பகுதியில் உள்ள நலகரில் செயல்பட்டு வந்த வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அறிந்த மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்துக்கு விரைந்து உள்ளது. தீயணைப்பு படையினர், காவல்துறையினருடன் தேசிய மீட்பு படையினரும் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்தில் மாவட்ட துணை கமிஷனர் சென்றார். சுமார் 60 பேரை தொழிற்சாலையில் இருந்து மீட்டு உள்ளோம். அவர்களில் 19 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளே சிக்கி இருப்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் சரிவர தெரியவில்லை. இருந்தும் தொடர்ந்து மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியில் தேசிய மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்” என மாநில பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமைச் செயலாளர் ஓங்கர் சர்மா தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தானி ராம் தெரிவித்துள்ளார்.