

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ், நேற்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
தெலங்கானாவில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் சந்திரசேகர ராவ் தலைமையில் தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்த பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியை இழந்தது. தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அக்கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.
இதற்கிடையில் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் சந்திரசேகர ராவ் தனது பண்ணை வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட சந்திரசேகரா ராவ், பிறகு டிஸ்சாரஜ் செய்யப்பட்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கஜ்வேல் தொகுதியில் அவர் வெற்றி பெற்றாலும் எம்எல்ஏவாக பதவியேற்கவில்லை.
இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவை சபாநாயகர் கட்டம் பிரசாத் குமாரின் அலுவலகத்தில் சந்திரசேகர ராவ் நேற்று எம்எல்ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் அப்போது உடனிருந்தனர்.