

ராஞ்சி: கனிம வளங்கள் நிறைந்த மாநிலமாக, சுரங்கங்கள் ஏராளமாக உள்ள மாநிலமாக அறியப்படுவது ஜார்க்கண்ட். ஆனால், அந்த கனிம வளங்களை தாண்டி ஜார்க்கண்ட்டை மிகவும் பிரபலமாக அறியவைப்பது அம்மாநிலத்தின் அரசியல் ஸ்திரமின்மையே. பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்டின் அரசியல் வரலாற்றில் 23 ஆண்டுகளில் 12வது முதல்வர் சம்பாய் சோரன். அதிர்ச்சியாக உள்ளதா... ஆம், ஜார்க்கண்ட் அதன் 23 ஆண்டு வரலாற்றில் 12 முதல்வர்களையும் மூன்று முறை குடியரசுத் தலைவர் ஆட்சியையும் கண்டுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர்களின் சராசரி பதவிக்காலம் சுமார் 1.5 ஆண்டுகள் என்றால் இன்னும் திகைப்பை ஏற்படுத்தும். திகைப்பை தாண்டி உண்மையும் அதுதான். சுயேட்சை வேட்பாளரை முதலமைச்சராகக் கொண்ட மாநிலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது ஜார்க்கண்ட். அந்த முதல்வர் இரண்டு ஆண்டுகள் வரை பதவியில் நீடித்தார்.
இந்த 12 முதல்வர்களின் கதைகளிலும் மிகவும் ஆச்சரியமான கதை ஷிபு சோரனின் கதை. ஷிபு சோரன்... தற்போது பண மோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு பதவி விலகியுள்ள ஹேமந்த் சோரனின் தந்தை அவர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியை நிறுவியதும் அவரே. பிஹாரில் இருந்து தனி ஜார்க்கண்ட் உருவாக்கப்படுவதில் மிக முக்கியமான தலைவராக அறியப்பட்டவர் ஷிபு சோரன். தொண்டர்களால் 'குருஜி' என்று குறிப்பிடப்படும் அவர் வெறும் 10 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக பதவி வகித்த வரலாறும் உண்டு.
ஜார்க்கண்ட் மாநில அந்தஸ்தைப் பெற்றதில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கைது செய்யப்பட்ட மூன்றாவது முதல்வர் ஹேமந்த் சோரன். முன்னதாக அவரது தந்தை ஷிபு சோரன் மற்றும் மது கோடா ஆகிய இருவரும் முதலமைச்சராக கைது செய்யப்பட்டனர்.
2000 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில், ஜார்க்கண்ட் ஐந்து முதல்வர்கள் தலைமையிலான ஒன்பது அரசாங்கங்களையும் மூன்று முறை குடியரசுத் தலைவர் ஆட்சியையும் கண்டது. பாபுலால் மராண்டி, அர்ஜுன் முண்டா, ஷிபு சோரன், மது கோடா மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் 2000 முதல் 2014 வரை சராசரியாக 15 மாதங்கள் ஆட்சி நடத்தினர்.
14 ஆண்டுகளில், ஷிபு சோரன் மற்றும் பாஜகவின் அர்ஜுன் முண்டா ஆகியோர் தலா மூன்று முறை முதல்வர்களாக பதவியேற்றனர். பாஜகவின் பாபுலால் மராண்டி ஜார்க்கண்டின் முதல் முதலமைச்சராக பதவியேற்றார். எனினும், இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் மட்டுமே அவரது ஆட்சி இருந்தது. பழங்குடி மற்றும் பழங்குடியினர் அல்லாத அரசியலால் பாபுலால் மராண்டி பதவி விலக நேரிட்டது.
ஷிபு சோரன் மொத்தமாக மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ளார். 10 நாட்கள் பதவியில் இருந்தது உட்பட. இதில் இரண்டு முறை ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் அவரது அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதன் விளைவாக குடியரசுத் தலைவர் ஆட்சி மூன்று முறை விதிக்கப்பட்டது. இதன் எண்ணிக்கை மொத்தம் 645 நாட்கள்.
23 ஆண்டுகால வரலாற்றில், ஜார்க்கண்டில் ஒரேயொரு முதல்வர் மட்டுமே தனது ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்துள்ளார். அவர் பாஜகவின் ரகுபர் தாஸ். பாஜகவின் ரகுபர் தாஸ் முதலமைச்சராக பதவியேற்ற 2014-க்குப் பிறகு ஜார்க்கண்டில் அரசியல் நிலைமை சீரானது. இதனால் ஜார்க்கண்டின் முதல் மற்றும் ஐந்தாண்டு காலம் முழுவதுமாக பதவி வகித்த ஒரே முதலமைச்சரானார் ரகுபர் தாஸ். இதன்பின் 2019 ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. ஹேமந்த் சோரன் இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார்.
ஆனால் இப்போது பண மோசடி வழக்கில் பதவியை இழந்துள்ளார். புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வாகியுள்ளார். பெருன்பான்மை உறுப்பினர்களை கொண்டுள்ள ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய வாய்ப்புள்ள போதிலும், ஐந்தாண்டு காலத்தை முழுமையாக முடிக்க முடியாத முதல்வர்களின் நீண்ட பட்டியலில் ஹேமந்த் சோரன் இணைந்துள்ளார்.