

ரயில்வேயில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள போதும், செயல்பாட்டுப் பிரிவில் அது அனுமதிக்கப்படமாட்டாது என மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரயில்வேயில் உள்கட்டமைப்பு மற்றும் இதர பிரிவுகளில் மட்டுமே நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும். செயல்பாட்டுப் பிரிவில் அனுமதிக்கப்படாது. அந்நிய முதலீடுகளை ரயில்வே துறை ஈர்ப்பதற்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றார்.
ரயில்வேதுறை 29 ஆயிரம் கோடி நிதிச்சுமையில் தவிக்கிறது. ஆகவே, நேரடி அந்நிய முதலீடு அத்துறையின் சுமையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது நாட்டை விற்பனை செய்யும் செயல் எனக் கூறி, மாநிலங்களவையில் திரிணமூல் மற்றும் இடதுசாரிகள் அமளியில் ஈடுபட்டனர்.
நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்பாக இதனை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக, அமைச்சரவை அவசர அவசரமாக ஒப்புதல் அளித்துள்ளது என திரிணமூல் குற்றம் சாட்டியது. நேரடி அந்நிய முதலீடு அல்ல, நேரடி அந்நிய தலையீடு, அந்நிய திணிப்பு என அக்கட்சி குற்றம் சாட்டியது.
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராஜா, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பி.ராஜீவ் ஆகியோரும் ரயில்வே, பாதுகாப்பு, காப்பீடு துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.