

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் உள்ள கியான்வாபி மசூதி, அங்கி ருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுபோல, ஆச்சார்ய வேத வியாச பீட கோயில் தலைமை அர்ச் சகர் ஷைலேந்திர குமார் பதக் என்ப வரும் அம்மன் மற்றும் தரைகீழ் தளத்தில் உள்ள தெய்வங்களை வழிபட அனுமதி கோரி வாராணசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டது.
கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அது நீரூற்று பகுதி என்றும் தொழுகைக்கு வருபவர்கள் கை, கால் கழுவுவதற்காக அதில் நீர் நிரப்பட்டுள்ளது (ஒசுகானா) என்றும் மசூதி நிர்வாகம் தெரிவித்தது. எனினும், அந்தப் பகுதிக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்திய ஏஎஸ்ஐ. தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பித்தது. அதன் நகல் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கின் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டன.
அந்த அறிக்கையில், கியான்வாபி மசூதி 17-ம் நூற்றாண்டில் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கள ஆய்வின்போது கிடைத்த கல்வெட்டுகள், சிற்பங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் அங்கு ஏற்கெனவே கோயில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன" என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வாராணசி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள தரைகீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கப்படுகிறது.
அர்ச்சகர்கள் பூஜை செய்யவும், பக்தர்கள் பிரார்த்தனை செய்யவும் ஏதுவாக இரும்பு கம்பிகள் அமைப்பது உட்பட தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் 7 நாட்களில் செய்ய வேண்டும். பூஜை செய்வதற்கான அரச்சகரை, காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட் டளை நியமிக்க வேண்டும். இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 8-ம் தேதி விசாரிக்கப்படும். அதற்குள் அஞ்சுமான் இன்டிஜாமியா மசூதி நிர்வாகம் உள்ளிட்டோர் தங்கள் ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்யலாம்" என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ஏற்க முடியாது என்றும் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் மசூதி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்