கியான்வாபி வழக்கில் அதிரடி முதல் ‘சிஏஏ’வை எதிர்க்கும் ஸ்டாலின், இபிஎஸ் வரை | செய்தித் தெறிப்புகள் 10  @ ஜன.31, 2024 

கியான்வாபி வழக்கில் அதிரடி முதல் ‘சிஏஏ’வை எதிர்க்கும் ஸ்டாலின், இபிஎஸ் வரை | செய்தித் தெறிப்புகள் 10  @ ஜன.31, 2024 
Updated on
3 min read

கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபட அனுமதி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் உள்ள தெய்வங்களை வழிபட இந்துக்களுக்கு அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா பிறப்பித்த இந்த உத்தரவு குறித்து வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, ‘கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் 7 நாட்களுக்குள் மேற்கொள்ள நீதிமன்றம் உத்ரதவிட்டுள்ளது. எனவே, இன்னும் 7 நாட்களில் இந்துக்கள் அங்கு சென்று வழிபட முடியும். அங்குள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்ய ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது’ என தெரிவித்தார்.

அதேநேரத்தில், வாரணாசி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கியான்வாபி மசூதி தரப்பு தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி மைய மதிய உணவுக்கான செலவினத் தொகை உயர்வு: குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.41.14 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

“தமிழகத்தில் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம்” - முதல்வர் உறுதி: “தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே, "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்யும் ஸ்பெயின் நிறுவனம்: ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளனர். அந்நாட்டின், ஆக்சியானா நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்வம் காட்டியிருக்கிறது. அதேபோல், ரூ.400 கோடி ரூபாய் முதலீட்டில் ரோக்கா நிறுவனம் பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை அல்லாதவர்கள் பழநி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திட தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, "மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தன்னை அறியாமல் நீதிமன்றமும் துணை போயிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரையும் விமர்சனமும்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், “ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது. பல நூற்றாண்டுகளாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்தக் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல் ஜம்மு காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இப்போது, சட்டப்பிரிவு 370 என்பதும் வரலாறாக மாறிவிட்டது. மேலும், இந்தப் நாடாளுமன்றம் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.” என்று பேசினார்.

புதன்கிழமை தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி முடிவடைய உள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், வியாழக்கிழமை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுடன் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் நாடாளுமன்ற உரை, ‘தேர்தல் உரை’யைப் போன்று இருந்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.

“மக்களின் ஆசியுடன் இந்தப் பயணம் தொடரும்” - பிரதமர் மோடி: “2024 மக்களவை தேர்தலுக்கு பின் எனது அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். மக்களின் ஆசியுடன் இந்தப் பயணம் தொடரும்” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

“இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பேன்” - நிதிஷ்: இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பேன் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஏற்கெனவே எந்தக் கூட்டணியில் இருந்தேனோ அதே கூட்டணிக்கு வந்துவிட்டேன். இனி எப்போதும் இதே கூட்டணியில் இருப்பேன். பிஹார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி உடனும் காங்கிரஸுக்கு தொகுதிப் பங்கீடு சிக்கல்: சமாஜ்வாதி கட்சி கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டணி விஷயத்தில் சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமாஜ்வாதி கட்சி வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகளில் பல தொகுதிகள் காங்கிரஸ் கட்சி கேட்ககக் கூடியவை. சமாஜ்வாதி கட்சியின் செயல் மிகவும் ஆபத்தானது. சமாஜ்வாதி கட்சி எந்த தகவலையும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறதோ அங்கெல்லாம் கூட்டணி தர்மத்தை பின்பற்றுகிறது. சமாஜ்வாதி கட்சி எங்களுக்கு இடங்களை ஒதுக்குவதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. நாங்கள் தேசிய கட்சி. எனவே, தொகுதிப் பங்கீடு விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். அதன் பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹேமந்த் சோரன் மீது பாஜக காட்டம்: ஊழல் வழக்கில் விசாரிப்பதற்காக அமலாக்கத் துறையினரால் தேடப்பட்டு வந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் தலைமறைவாகிவிட்டார் என்றும், அவரது மனைவி அடுத்த முதல்வராக பதவியேற்க வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது என்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in