“நிதிஷ் குமாரால் பாஜகவுக்கு பெரிய லாபம் இல்லை; ஆனால்..” - பிரசாந்த் கிஷோர் கருத்து

நிதிஷ் குமார் | கோப்புப்படம்
நிதிஷ் குமார் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரையும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியையும் தன்பக்கம் இழுத்துள்ளதால் என்டிஏ கூட்டணிக்கு பெரிய லாபம் எதுவும் இல்லை; என்றாலும் அது எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி இருப்பது தேர்தல் அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு வாத விவாதங்கள் எழுகின்றன. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு திரும்பி இருப்பது 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர், “எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒரு பகுதியாக நிதிஷ் குமார் இருந்தது ஒரு விஷயமே இல்லை. அவரது சொந்த முயற்சியில் அவர் எதையும் உருவாக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியில் சிலர் பலத்தை நம்பினர். அவர்கள் இந்தப் புதிய கூட்டணியின் முக்கியமான அங்கமாக, பெரும் பலமாக நிதிஷ் குமார் இருந்தார் என்று நம்பினர். நிதிஷை தன்பக்கம் பாஜக இழுத்திருப்பதன் மூலமாக ஒரு பெரும் போரில் வெல்வதற்காக சிறு பூசல்களில் தோற்றுப்போனால் பரவாயில்லை என்பதுபோல் சமரச உத்தியைக் கையாண்டிருக்கிறது.

அதேவேளையில், எதிர்கட்சிகளுக்கு உளவியல் ரீதியாக உரு பின்னடைவை பாஜக உருவாக்கியுள்ளது. ஆனால் இது பாஜகவுக்கு பெரிய ஆதாயத்தை எல்லாம் கொண்டுவராது. இருப்பினும் இப்போதைய சூழலில் பாஜக முன்னிலையில் தான் இருந்தது.

இண்டியா கூட்டணி உருவாக்கம் இன்னும் முன்னதாகவே நடந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு 2024-ல் மக்களவைத் தேர்தல் நடக்க இருப்பது தெரியும். கூட்டணியை அவர்கள் 2021, 2022-ல் அமைத்திருந்தால், மற்ற விஷயங்களை பேசி முடிவெடுக்க அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருந்திருக்கும்”. என்று கூறினார்.

பாஜகவுடன் இணைந்து பிஹாரின் முதல்வராக 9-வது முறையாக நிதிஷ் குமார் பதவி ஏற்ற போது மற்றொரு ஆங்கில ஊடகத்துக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியின் போது,“மெகா கூட்டணியை நிதிஷ் குமார் தூக்கி எறிந்ததற்காக அவரைக் கடுமையாக சாடினார். மேலும் நிதிஷ் குமார் தனது கடைசி விளையாட்டை விளையாடுகிறார். மக்கள் அவரை நிராகரித்து விட்டார்கள். அதனால் தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் எதையும் செய்வார். பிஹார் அரசியல் விவகாரம் இண்டியா கூட்டணியை காலி செய்வதற்கான பாஜகவின் திட்டம்” என்று குற்றம் சாட்டியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in