

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறை விசாரணையை தவிர்க்கும் வகையில் டெல்லியில் இருந்து தப்பினார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அமலாக்கத் துறைவட்டாரங்கள் கூறியதாவது:
நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் பண மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, அவரது டெல்லி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார், வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் கடந்த 29-ம் தேதி டெல்லிவந்திருந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அன்று மாலை 6 மணிக்கு ராஞ்சி செல்லவிருந்த விமானப் பயணத்தை சோரன் ரத்து செய்ததாக கிடைத்த தகவலை அடுத்து,அவரை தேடும் நடவடிக்கையில் டெல்லி காவல் துறையினரின் உதவியும் கோரப்பட்டது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில் ஆஜராவதை தவிர்க்க ஹேமந்த் சோரன், டெல்லியில் இருந்து தலைமறைவானதாக தகவல் வெளியானதை அடுத்து, டெல்லி விமான நிலையத்தில் அமலாக்கத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த சோரன், காரிலேயே 1,200 கி.மீ. தூரம் பயணம் செய்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு வந்துள்ளார்.
அவசர ஆலோசனை: இந்நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், அவரது மனைவி கல்பனாவும் பங்கேற்றார்.
ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்யும் நிலைஏற்பட்டால், அவரது மனைவி கல்பனா முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஹேமந்த் சோரனின் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், “அமலாக்கத் துறை கூற்றுப்படி முதல்வர் சோரன் எங்கும் தலைமறைவாகவில்லை. விசாரணை என்பது ஒரு அரசியல் சூழ்ச்சி. 31-ம் தேதி (இன்று) விசாரணையை எதிர்கொள்ள சோரன் தயாராக உள்ளார். அதற்கான மின்னஞ்சலும் அமலாக்கத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களுக்கு எதிராக ஹேமந்த் சோரன் செய்த மேல் முறையீடுகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம்மற்றும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடிசெய்துவிட்டன. இந்த நிலையில்,அமலாக்கத் துறை முன்பு விசாரணைக்கு ஆஜராவதை தவிர சோரனுக்கு வேறு வழியில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அப்போது, அவர்கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் ராஞ்சி நகரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும்பதற்றம் நீடிப்பதால் போலீஸார்குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.