Last Updated : 27 Feb, 2018 11:34 AM

 

Published : 27 Feb 2018 11:34 AM
Last Updated : 27 Feb 2018 11:34 AM

அடுத்த வங்கி மோசடி: தென் ஆப்ரிக்காவை ஆட்டிப்படைத்த குப்தா குடும்பத்தின் ஊழல்கள் - அதிர வைக்கும் பாங்க் ஆப் பரோடா தொடர்பு

இந்தியாவில் அடுத்தடுத்து வங்கி மோசடிகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவை பயன்படுத்தி இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்தினர் செல்வம் குவித்த மோசடி விவகாரத்தில் இந்திய பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடாவும் சிக்கியுள்ளது. இந்த வங்கியின் மூலம் தவறான முறையில் பணப் பரிமாற்ற்ஙகள் நடந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தென்ஆப்பிரிக்க அதிபராக இருந்த ஜேக்கப் ஜுமா பல்வேறு மோசடிகள் செய்தது தெரிய வந்ததையடுத்து அவருக்கு எதிராக சமீபத்தில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவர் பதவி விலகினார். 1999-ல் ராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததில் ஊழல், கடந்த 2014-ம் ஆண்டில் அரசுப் பணத்தில் சொகுசு வீடு கட்டியது, அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக ஒதுக்கியது என பல புகார்கள் அவர் மீது கூறப்பட்டன.

இந்த ஊழல் மோசடியில் இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்தினர், ஜூமாவுன் கைகோத்து செயல்பட்டதும் தெரிய வந்தது. அதன் பிறகு குப்தா குடும்பத்தின் முறைகேடுகள் பற்றியும் அங்கு பெரிய அளவில் வெளியே வந்தன. குப்தா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடந்து அவர்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் துபாய்க்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் நடந்த இந்த மோசடியில் குப்தா குடும்பத்தினருக்கு உதவியாக பாங்க் ஆப் பரோடாவில் மோசடியாக பணப் பரிமாற்றம் நடந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இததொடர்பாக இந்து நாளிதழ் (ஆங்கிலம்) நடத்திய புலனாய்வு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன.

தென் ஆப்ரிக்காவில் குப்தா குடும்பத்தினர் நிலக்கரி சுரங்கம், அரசு ஒப்பந்தம், கட்டமான தொழில், ஊடகம் என பல துறை சார்ந்த தொழில்களிலும் மோசடிகள் செய்துள்ளனர். அதில், பெருமளவு பண பரிவர்த்தனை, தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பரக் நகரில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளை மூலம் நடந்துள்ளது. தென் ஆப்ரிக்கா மட்டுமின்றி, இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி முறைகேடான வகையில் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்த வங்கிகளையில் உள்ள ஊழியர்கள் சிலரின் துணையுடன் இந்த மோசடிகள் நடந்துள்ளன. தென் ஆப்ரிக்காவில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளைகளை, குப்தா குடும்பத்தினர் 2005-ம் ஆண்டு முதல் தங்கள் சொந்த தொழில் நலனுக்காக முழுமையாக பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் பாங்க் ஆப் பரோடாவின் தென் ஆப்ரிக்க கிளைகளில் குப்தா குடும்பத்தின் மூலம் மொத்தம் 17,000 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவத்தின் சார்பில் அளிக்கப்படும் பில்களுக்கு எந்தவித ஆவணங்களையும் கேட்காமல், இணைய வழியில் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த மோசடி பண பரிவர்த்தனை வங்கியின் செயல்பாடுகளுக்கு எதிரானது என உணர்ந்து, 2016-ம் ஆண்டில் பிற வங்கிகள், குப்தா குடும்ப நிறுவனங்களுக்கான சேவை அளிப்பதை நிறுத்திக் கொண்டன. ஆனால் பாங்க் ஆப் பரோடா மட்டும் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு முறைகேடாக சேவை அளித்துள்ளது. எந்தவித கண்காணிப்பும இன்றி, பல கோடி ரூபாய் பணம் பல்வேறு கணக்குகளில் வர வைக்கப்பட்டு, அந்த நிறுவனம் கோரும் கணக்குகளுக்கு வர வைக்கப்ப்டடுள்ளன.

அவ்வாறு பண பரிவர்த்தனை செய்யப்பட்ட பலவும் பினாமி மற்றும் போலி நிறுவனங்கள் ஆகும். அந்த நிறுவனங்களின் ஆவணங்கள் ஏதுமின்றி பாங்க் ஆப் பரோடா வங்கி முறைகேடாக பரிவர்த்தனை செய்துள்ளது. எனவே இது திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழல் நடவடிக்கை என வங்கி விதிமுறைகள்படி கூறப்படுகிறது. இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் சிலர் தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தவறான, மோசடியான பணப் பரிவர்த்தனை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் உயரதிகாரிகள் மூலம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு குப்தா குடும்பத்தினர் இந்த பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.

தென் ஆப்ரிகாவில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் வங்கி கிளையின் தலைவர் சஞ்சீவ் குப்தா (இவர் குப்தா குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த விவரம் வெளியானதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை விவரங்களை தருமாறு வங்கியிடம் கோரியுள்ளது. மேலும் வங்கிக்கு அபாரதம் விதிக்கப்படுவதுடன், சஞ்சீவ் குப்தா பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

 

தமிழில்: நெல்லை ஜெனா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x