Last Updated : 20 Aug, 2014 08:16 AM

 

Published : 20 Aug 2014 08:16 AM
Last Updated : 20 Aug 2014 08:16 AM

ஜெயலலிதா கூட்டுச்சதியில் ஈடுபட்டாரா?: பெங்களூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருடன் சேர்ந்து ஜெயலலிதா எவ்வித கூட்டுச்சதியிலும் ஈடுபடவில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் ஆதார மில்லாத குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த மனு மீதான தீர்ப்பை இன்று வெளியிடுவதாக நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ள கூட்டுச்சதி குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என நால்வர் தரப்பிலும் கடந்த வாரம் தாக்கல் செய்த‌ மனு விசாரணைக்கு வந்தது.

கூட்டுச்சதிக்கு ஆதாரமில்லை

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் அம்மனு மீது வாதிட்டார். அவர் வாதிடுகையில்,''1991-96 கால கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவரோடு நெருக்கமாக இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு சொத்து குவித்தார் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இவ்வழக்கை தொடர்ந்துள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் தாங்கள் ஜெயலலிதாவுடன் சேர்ந்து எவ்வித கூட்டு சதியிலும் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதே போல இவ்வழக்கில் சாட்சியம் அளித்த அனைத்து அரசு தரப்பு சாட்சிகளும் இத்தகைய புகாரை ஜெயலலிதா மீது தெரிவிக்கவில்லை. வழக்கை தொடுத்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரும் கூட்டுச்சதி தொடர்பாக எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 211, 212, 213 மற்றும் 214 ஆகியவற்றின்படி, ‘வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் இருந்தால், அத்தகைய புகாரை நீதிமன்றம் ஏற்கக் கூடாது’ என கூறப்பட்டிருக்கிறது. எனவே ஜெயலலிதா மீது தெரிவிக் கப்பட்டுள்ள கூட்டுச்சதி குற்றச் சாட்டை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

தாமதமான மனு

நீதிபதி டி'குன்ஹா கூறும் போது, ''நீங்கள் (நால்வர் தரப்பு) இது போன்ற மனுக்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் நீதிமன்றத்தில் தொடுத்திருக்க வேண்டும். 18 ஆண்டுகள் கழித்து, வழக்கு முடியும் நிலையில் உள்ளபோது தாக்கல் செய்தது ஏன்?'' என கேட்டார்.

அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், 'குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கில் எந்த கட்டத்திலும் நீதி கோரும் உரிமையை சட்டம் வழங்கி இருக்கிறது. அதன்படி நாங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறோம்' என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''இவ்வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போது புதிய மனு தாக்கல் செய்து வழ‌க்கை தாமதப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நீதிமன்றம் அவர்களுடைய கோரிக்கையை ஏற்க கூடாது. உடனடியாக இம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்'' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி'குன்ஹா, ஜெயலலிதா மீதான கூட்டுச்சதி தொடர்பான மனு மீது புதன்கிழமை தீர்ப்பு வழங்குவதாகக்கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x