

“தொழில் தொடங்க திறன்மிக்க மனிதவளம், உயர் சலுகைகள்” - முதல்வர் உறுதி: தமிழகத்தில் தொழில் தொடங்குங்கள். அதற்கேற்ற சூழலையும், திறன்மிக்க மனிதவளம், உயர் சலுகைகளை அளிக்கிறோம் என்று ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரபூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது என்று ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல் ஸ்டாலின் பேசினார்.
செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்திக்கு தமிழக ஆளுநர் புகழஞ்சலி: மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில், "மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். அவருடைய அகிம்சை, எளிமை, சத்தியம் ஆகியன பாரதத்தின் ஆன்மா” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
யுஜிசி நியமனங்களில் இடஒதுக்கீடு ரத்தா? - வைகோ கண்டனம்: யுஜிசி நியமனங்களின்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவுகளில் தகுதியான ஆட்கள் அல்லது போதுமான ஆட்கள் இல்லையெனில் பொதுப்பிரிவுக்கு மாற்றிட இடஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் என்று சமூக நீதிக் கோட்பாட்டை நீர்த்துப் போகும் வகையில் புதிய வரைவு பரிந்துரை செய்துள்ளது. யூ.ஜி.சியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: அமைச்சர் தகவல்: நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத் தொடர் நாளைத் தொடங்கவுள்ள நிலையில் இன்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் ரூ.36 லட்சம், சொகுசு கார் பறிமுதல்: நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், அவரது டெல்லி வீட்டிலிருந்து ரூ.36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
“வெறுப்பு புயலில் உண்மை, நல்லிணக்கச் சுடர் அணைந்துவிடக் கூடாது”: மகாத்மா காந்தியின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில், “வெறுப்பு மற்றும் வன்முறை நிறைந்த சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது. இப்போது, வெறுப்பு எனும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக பிரமுகர்கொலையில் 15 பேருக்கு மரண தண்டனை: கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது.