

பாட்னா: ரயில்வே வேலைக்கு நிலங்களை லஞ்சமாக பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் நேற்று பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசார ணைக்கு ஆஜரானார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில் குரூப்-டி பணிகளை வாங்கித் தந்ததற்கு பலரின் நிலங்களை லாலுவும் அவரது குடும்பத்தினரும் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ கடந்த ஆண்டு அக்டோபரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அமலாக்கத் துறை தரப்பில்விசாரணைக்கு வருமாறு லாலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை ஏற்று பாட்னாவில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் லாலு பிரசாத் நேற்று ஆஜரானார். லாலுவுடன் அவரது மகள் மிசா பாரதி வந்திருந்தார்.
இது தொடர்பாக ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் குமார் ஜா கூறும்போது, “அரசியல் போட்டியாளர்கள் மீது அரசு அமைப்புகளை பாஜக ஏவி வருகிறது. இது அமலாக்கத் துறையின் சம்மன் அல்ல. பாஜகவின் சம்மன். இதைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்றார். சுமார் 9 மணி நேர விசாரணைக்கு பிறகு லாலு பிரசாத் யாதவ் வெளிவந்தார்.