Last Updated : 30 Jan, 2024 08:31 AM

1  

Published : 30 Jan 2024 08:31 AM
Last Updated : 30 Jan 2024 08:31 AM

அனுமன் கொடியை அகற்றியதால் பதற்றம்: பாஜக, மஜத மீது முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் மண்டியா அருகே 108 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட அனுமன் கொடியை அரசு அதிகாரிகள் அகற்றியதால் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் இந்து அமைப்பினர் 108 அடி உயர கம்பத்தை நட்டு அதில் அனுமன் கொடி ஏற்றினர். கெரகோடு கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் அனுமதியை பெறாமல் அனுமன் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த சிலர், “அரசு இடத்தில் தேசியக் கொடி, கன்னட கொடி தவிர வேறு கொடிகளை ஏற்ற அனுமதி இல்லை. எனவே அதனை அகற்ற வேண்டும்” என‌ கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் மண்டியா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது இடத்தில் அனுமதி இல்லாமல் ஏற்றப்பட்ட அனுமன் கொடியை அகற்றினர். மேலும் அந்த 108 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர்.

அப்போது பாஜக, மஜத, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் போராட்டம் ந‌டத்தினர். மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கிராமத்தில் இருந்த அனைத்து கடைகளையும் அடைத்து, வீடுகளில் அனுமன் கொடி ஏற்றி எதிர்ப்பை காட்டினர்.

கெரகோடு கிராமத்தில் பாஜக, மஜத, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் புதன்கிழமை காலை6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பாஜக, மஜத தலைவர்கள் அங்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தை கண்டித்து கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், “கிராம பஞ்சாயத்தின் அனுமதி பெறாமல் எந்த கொடியும் வைக்க முடியாது. இதே நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் அனுமன் கொடியை ஏற்றினால் அனுமதிக்க முடியுமா? இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜக, மஜதவினர் இருக்கின்றனர். கிராம மக்களை தூண்டிவிட்டு மத அரசியல் செய்கின்றனர். சட்டத்துக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க‌ப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x