

பாட்னா: பதவியேற்பு விழாவுக்கு முன்பு, ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ‘‘பிஹாரில் தற்போதைய கூட்டணியோடு (ராஷ்டிரிய ஜனதா தளம்) இணைந்து அரசை நடத்த முடியவில்லை. அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்து பேசினேன். கூட்டணியில் இருந்து வெளியேற அவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். தேசிய அளவிலான இண்டியா கூட்டணியும் எனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. தற்போது பாஜகவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளேன்’’ என்றார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு அவர் கூறியபோது, ‘‘தேஜஸ்வி யாதவ் எதுவுமே செய்யவில்லை. இருந்த இடத்துக்கே திரும்பி வந்துள்ளேன். இனி வேறு எங்கும் செல்ல மாட்டேன். நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம்’’ என்றார்.
ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் நீரஜ்குமார் கூறும்போது, “ராஷ்டிரிய ஜனதா தள அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டனர். எனவே, மக்கள் நலன் கருதி புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளோம். பிஹாரில் இண்டியா கூட்டணி தற்போது உயிர்ப்புடன் இல்லை’’ என்றார். மூத்த தலைவர்கே.சி.தியாகி கூறும்போது, ‘‘பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் மக்களவை தேர்தலை சந்திக்க இண்டியா கூட்டணி முடிவு செய்தது. ஆனால், திடீரென பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கே முன்னிறுத்தப்பட்டார். தொகுதிபங்கீடு விவகாரத்திலும் காங்கிரஸின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம்’’ என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறும்போது, ‘‘2024-க்குள் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு முடிவுரை எழுதப்படும்’’ என்றார்.