

அம்ராவதி: மகாராஷ்டிர மாநிலம் அம்ராவதி மாவட்டத்தில் உள்ள வசார் பகுதியில், மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆசிரமம் நடத்தி வருபவர் சங்கர் பாபா பபால்கர். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதித்த, ஆதரவற்ற 123 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவரது சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கர் பாபா (81) நேற்று கூறியதாவது:
எனக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதை ஆதரவற்ற, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கிறேன். விருது பெறும் நிகழ்ச்சிக்கு குழந்தைகள் சிலரை டெல்லி அழைத்து செல்ல முயற்சிக்கிறேன். பிரதமர் அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு, பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக கூறினர். அப்போது, பிரதமர் மோடியை நான் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தேன். மனநலம் பாதித்த அல்லது ஆதரவற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு புதிய சட்டம் கொண்டுவர வேண்டும். டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், அவரிடமும் இதை வலியுறுத்துவேன். இவ்வாறு சங்கர் பாபா கூறினார்.