Last Updated : 16 Feb, 2018 07:42 PM

 

Published : 16 Feb 2018 07:42 PM
Last Updated : 16 Feb 2018 07:42 PM

ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்தால் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்- பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என மக்கள் உணர்ந்தால், தேர்தலில் கடுமையான முடிவுகளை எடுப்பார்கள் என்று பாஜகவுக்கு மறைமுகமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், நடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது.

, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை.

இதனால், சமீபத்தில் நடந்த முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டமும் நடத்தினர்.

ஆனால், முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக மீதான அதிருப்திகளை உட்கட்சிக் கூட்டங்களில் மட்டுமே தெரிவித்து வந்தார். வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம் அமராவதி நகரில் இன்று நடந்தது. அப்போது அதிகாரபூர்வமாக மத்தியில் ஆளும் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்தார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், “ கடந்த 2014ம்ஆண்டு ஆந்திரமாநிலம் பிரிக்கப்பட்டபோது, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாநிலத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் போதுமானதாக இல்லை.

மக்கள் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என உணர்ந்துவிட்டால், நாம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம். தேர்தலின்போது கடுமையான முடிவுகளை மக்கள் எடுப்பார்கள்.

ஆந்திர மாநிலத்தை பிரிக்கக் கூடாது என்று நாங்கள் கூறியபோது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மாநிலத்தை பிரித்தது. அதற்கான விலையை சட்டசபைத் தேர்தலில் மக்கள் அளித்துவிட்டார்கள். அவர்களால் டெபாசிட் கூட பெறமுடியவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக மாநில அரசு 11 முதல் 12 சதவீத வளர்ச்சியை எட்டி வருகிறது. வரும் ஆண்டில் வளர்ச்சி இலக்கு 15 சதவீதத்தை எட்ட வேண்டும்.

ஒவ்வொரு துறைவாரியாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆய்வு செய்து வருகிறோம். சில துறைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. சில துறைகளில் வளர்ச்சியை இல்லை. அந்த துறைகள் சிறப்பாகச் செயல்பட்டு வளர்ச்சியை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பல்வேறு துறைகளில் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வரும் பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய சட்டங்கள் எந்த விதமான சமரசமில்லாமல் இயற்றப்படும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x